2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு எதிரொலி: அலைக்கற்றை இல்லாத புதிய தொலைத் தொடர்பு கொள்கை- கபில் சிபல்

புது தில்லி, ஜன.29: அலைக்கற்றை ஒதுக்கீடு தவிர்த்த புதிய தொலைத் தொடர்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.  2-ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) அ
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு எதிரொலி: அலைக்கற்றை இல்லாத புதிய தொலைத் தொடர்பு கொள்கை- கபில் சிபல்
Published on
Updated on
1 min read

புது தில்லி, ஜன.29: அலைக்கற்றை ஒதுக்கீடு தவிர்த்த புதிய தொலைத் தொடர்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

 2-ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து இது குறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தால் அமைச்சர் ஆ. ராசா பதவி விலக நேர்ந்தது.

 இந்நிலையில் இத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் கபில் சிபல் விரைவில் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வெளியிடப்படும் என்றார். இனி அலைக்கற்றையுடன் லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. அலைக்கற்றை தேவைப்படும் நிறுவனங்கள் சந்தை நிலவரத்துக்கேற்ப விலையை செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இதனால் செல்போன் கட்டணங்கள் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 சனிக்கிழமை தில்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் கபில் சிபல் மேலும் கூறியது: ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கும்போது நிறுவனங்களுக்கு 4.4 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை அளிக்கப்படும். புதிய கொள்கையின்படி இனி இதற்கு தனியாகக் கட்டணம் செலுத்தவேண்டும். இதன்படி, புதிதாக சேவையளிக்கத் தொடங்கும் நிறுவனங்கள் 2 ஜி அலைக்கற்றையில் 1.8 மெகாஹெர்ட்ஸ் கூடுதலாக பெறவேண்டுமெனில் சந்தை நிலவரத்துக்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவேளை 6.2 மெகாஹெர்ட்ஸ் அளவுக்கு லைசென்ஸ் பெற்றுள்ள நிறுவனங்கள் கூடுதல் அலைக்கற்றைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இப்புதிய மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

 6.2 மெகாஹெர்ட்ஸýக்கும் கூடுதலாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கு ஏல முறையை பின்பற்றுவது குறித்து பரிசீலிப்பதாக சிபல் கூறினார்.

 இது தவிர, ஒருங்கிணைந்த வருவாய் பகிர்வு முறை பின்பற்றப்படும். இதனால் அனைத்து நிறுவனங்களும் செயல்படுவதற்கு ஏற்ற சமமான போட்டிச் சூழல் ஏற்படுத்தப்படும் என்றார்.

 புதிய கொள்கை ஏற்கெனவே இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில் அவற்றிடம் 6.2 மெஹாஹெர்ட்ஸ் அளவுக்கு அலைக்கற்றை உள்ளது. ஆனால் புதிதாக சேவையைத் தொடங்கும் நிறுவனங்கள் 1.8 மெஹாஹெர்ட்ஸ் அலைக்கற்றை கூடுதலாகப் பெற சந்தை நிலவரத்துக்கு ஏற்பக் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே போட்டி கடுமையாக உள்ள சூழலில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவது மிகவும் சிரமம். இந்நிலையில் கூடுதல் கட்டணம் செலுத்தி சேவையளிப்பது கடினமானது என்று புதிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

 அலைக்கற்றை விலை நிர்ணயத்தை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரையின் பேரில் தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) பின்பற்றும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.