புது தில்லி, ஜூலை 3: மத்திய அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளை அமைச்சர்கள் சிலர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றவில்லை என்று அமைச்சரவைச் செயலர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்தஅந்த அமைச்சக செயலர்களுக்கு அமைச்சரவைச் செயலர் நினைவூட்டும் கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அதில் அமைச்சரவைக் குழுவில் எடுத்த முடிவுகளை குறிப்பிட்ட அமைச்சகம் காலக்கெடுவுக்குள் நிறைவேற்றாதது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமைச்சகங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தங்களை அமைச்சகங்கள் தொடர்பு கொள்ளாததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த விவரங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால் எந்த அமைச்சகங்களுக்கு இது தொடர்பான நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அமைச்சரவைக் குழுவின் முடிவுகளை செயல்படுத்துவதில் அதிகம் மெத்தனம் காட்டும் அமைச்சகம் எது என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மிகவும் கடினமான சூழ்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் சில அமைச்சகங்கள் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். இது தொடர்பான விவரமும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். ஆனால் தங்களுக்கு எந்தவிதமான இடர்பாடுகளால் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்பது தொடர்பான முழுவிவரங்களையும் அந்த அமைச்சங்கங்கள் தெரிவிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.