மும்பை, ஜூலை 3: மும்பையில் கொலை செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் நீரஜ் குரோவரின் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2008-ம் வருடம் மும்பையின் ஜூஹு பகுதியில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக இந்தியக் கப்பற்படை அதிகாரி எமிலி ஜெரோம் மாத்யூ, மற்றும் கன்னட நடிகை மரியா சூசைராஜ் ஆகியோருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு குறித்து அதிருப்தியடைந்த நீரஜ் குரோவரின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் பண்டிட் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முறையான அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இவர்களில் சிலரை காவல்துறையினர் கைது செய்து பாங்கூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் கைது செய்யப்பட்டவர்களை மீட்க காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிருபமை தொடர்பு கொண்டதாக அசோக் பண்டிட் தெரிவித்தார். பின் சஞ்சய் நிருபமின் தலையீட்டின் பேரில் இவர்களுக்கு போராட்டம் நடத்த போலீஸôர் அனுமதி அளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி லோகண்ட்வாலா பகுதியிலிருந்து ஊர்வலமாகச் சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.