மும்பை, ஜூலை 3: மகாராஷ்டிரத்தில் பத்திரிகையாளர் தேவ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி வினோத் அஸ்ரானி என்ற வினோத் செம்பூர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் சேர்த்து இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் கைதாகியுள்ளனர். சோட்டா ராஜனுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வந்த வினோத், தேவ் கொலை செய்யப்பட்டதற்கு முந்தைய நாள் கொலையாளிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார் என்று தெரிகிறது. மேலும் கொலையாளிகளுக்கு இவர் மூலம்தான் பணம் சென்றுள்ளது. சோட்டா ராஜன்தான் ரூ.5 லட்சம் கொடுத்து இந்த கொலையைச் செய்துள்ளார் என்று மும்பை குற்றப்பரிவு போலீஸ் துணை கமிஷனர் ஹிமான் சுராய் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட வினோத், மும்பை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, ஜூலை 7 வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் போலீஸôர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எனவே இன்னும் ஓரிருநாளில் இந்த கொலையின் பின்னணி தொடர்பான முழுவிவரங்களும் தெரியவரும்.
முன்னதாக கடந்த ஜூன் 11-ல் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரால் தேவ் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக தங்கப்பன் ஜோசப் என்ற சதீஸ் கல்யா (34), அபிஜித் ஷிண்டே (28), அருண் தாக் (27), சச்சின் கெய்க்வாட் (27), அனில் வாக்முத் (35), நீலேஷ் ஷிண்டே (34), மகேஷ் அகவானே (25) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தங்கப்பன் ஜோசப்தான் துப்பாக்கியால் சுட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பத்திரிகை நிருபராக பணியாற்றி வந்த தேவ், திரைமறைவில் நடைபெறும் பல்வேறு குற்ற நடவடிக்கைகள் குறித்து எழுதி வந்தார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. எனினும் அவர் கொலை செய்யப்படதற்கான காரணம் முழுமையாகத் தெரியவில்லை என்று போலீஸôர் தெரிவித்துள்ளனர்.