திருவனந்தபுரம், ஜூலை 3: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட 7 நபர் குழு, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் பாதாள அறைகளைத் திறந்து சில நாள்களுக்கு முன்பு ஆய்வு செய்தது. அப்போது அங்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தெரியவந்தது. கடந்த சனிக்கிழமையும் இந்த ஆய்வு நடந்தது. அப்போதும் ஏராளமான நகைகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பின்னர் அதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கோயிலில் அதி தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேர செல்போன் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார்.