மும்பை, ஜூலை 9: ஊழலுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்த வேண்டுமென நாட்டு மக்களுக்கு அண்ணா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார்.
இப்போராட்டத்தின் போது துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ளவும் தான் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தெற்கு மும்பையில் சனிக்கிழமை "ஊழலுக்கு எதிரான இந்தியா' அலுவலகத்தை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி ஆகஸ்ட் 16 முதல் நான் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவது உறுதி. எந்த அச்சுறுத்தல் வந்தாலும் நான் பின்வாங்கிவிட மாட்டேன். போலீஸ் தடியடியை மட்டுமல்ல, துப்பாக்கி குண்டுகளையும் எதிர்கொள்ளும் துணிவுடன்தான் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளேன்.
மக்கள் குழுக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில்தான் தகவல் பெறும் உரிமைச்சட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டன. இப்போது லோக்பால் மசோதாவை வலியுறுத்தி வருகிறோம். இதற்காக மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் சந்திக்க வேண்டுமென்றால், வாழ்நாள் முழுவதும் அதனை எதிர்கொள்ளத்தயாராக இருக்கிறேன் என்றார்.
ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் செய்தால் தண்டனை நிச்சயம் என்பதை சமுதாயத்துக்கு உறுதியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதுவே எங்கள் நோக்கம்.
லோக் பால் மசோதா விஷயத்தில் மக்கள் குழுவினரை பல்வேறு வகைகளில் குறைகூறிய மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு பதில் அளித்த அவர், நாட்டில் மக்கள்தான் உண்மையான எஜமானர்கள், அமைச்சர்களும், அதிகாரிகளும் அவர்களுக்கு பணியாற்ற வேண்டியவர்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்பு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அரசியல் சாசனத்தின் 73, 74-வது பிரிவுகளில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்தார்.
அது பஞ்சாயத்து ராஜ்ஜியம் தொடர்பானது. எனவே நாட்டில் உள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்கு இது தொடர்பாக கருத்தைக் கேட்டு ராஜீவ் காந்தி கடிதம் எழுதினார். மக்கள் கருத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதென்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஆகஸ்ட் 16 முதல் நான் மேற்கொள்ளும் போராட்டம் இரண்டாவது சுந்திரப் போர். இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை விளக்குகளை அணைத்து வீதியில் இறங்கி ஊழலுக்கு எதிராக கோஷங்களை எழுப்ப வேண்டும் என்று ஹசாரே வேண்டுகோள் விடுத்தார்.
பாபா ராம்தேவின் போராட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கையை, தில்லி ஜந்தர் மந்தரில் நான் மேற்கொள்ளும் உண்ணாவிரதத்திலும் எடுக்கலாம் என்று பேசி வருகின்றனர். அது ஜனநாயகம் அல்ல, சர்வாதிகாரம். மகாத்மா காந்தியும், காமராஜரும் உருவாக்கி வளர்த்த காங்கிரஸ் ஆட்சியின் இன்றைய நிலை இதுதானா என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் ஹசாரே.