ஸ்ரீநகர், ஜூலை 9: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டத்தின் ராஜ்புரா பகுதியிலுள்ள போன்ஹாஜின் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்தக் கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்து தகவலறிந்த அவர்கள் அவ்வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
தீவிரவாதிகளைச் சரணடையும்படி பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த இஷான் பாய் என்ற ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தளபதியும் கொல்லப்பட்டார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக காஷ்மீர் பகுதியில் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டு வந்தார். இந்த மோதலில் ராணுவ மேஜர் ஒருவரும் காயமடைந்தார்.