நாகபுரி, ஜூலை 9: சமூக சேவகர் பாபா ஆம்டேவின் மனைவி சாதனா ஆம்டே (85) சனிக்கிழமை காலமானார்.
அவருக்கு டாக்டர் விகாஸ் ஆம்டே, டாக்டர் பிரகாஷ் ஆம்டே ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் டாக்டர் பிரகாஷ் ஆம்டே சேவைப் பணிக்காக மகசேசே விருது பெற்றவர். பாபா ஆம்டே, அவரது மனைவி சாதனா, மகன்கள் விகாஸ், பிரகாஷ் ஆகியோரின் மனைவியரும் (இருவரும் டாக்டர்கள்) சமூக சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழுநோயாளிகளின் புனர்வாழ்வுக்காக மகாராஷ்டிரத்தில் 3 ஆஸ்ரமங்களை ஆம்டே தொடங்கியபோது அதற்கு சாதனா உறுதுணையாக இருந்தார். பாபா ஆம்டே தனது 93-ம் வயதில் 2008 பிப்ரவரி 9-ல் காலமானார்.