பெங்களூர், ஜூலை 9: நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்ட மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அண்மைக் காலமாக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு, புதிதாக நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இம்மசோதாவின் வரைவுப் பணி வேகமாக நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.
விவசாயிகளின் நலனைப் பேணிக்காத்தல், நல்வாழ்வு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் புதிய சட்ட மசோதா கவனம் செலுத்தும். விவசாயிகளின் நலன் மற்றும் நிலையான வளர்ச்சியை சமமாகக் கருத அரசு விரும்புகிறது.
நிலம் கையகப்படுத்திய பிறகு விவசாயிகளின் மறுவாழ்வுப் பணிகள் குறித்த திட்டங்களும் மசோதாவில் இடம்பெறும். இந்த விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், இனியும் காலம் தாழ்த்தாமல் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றுவோம்.
உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்லாமல், கர்நாடகத்திலும் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இதுதவிர சில அமைச்சர்கள் நில ஊழலில் ஈடுபட்டுள்ளதற்கு எதிராகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகள் நலனை முழுமையாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
லோக்பால் மசோதா: குஜராத், கர்நாடகத்தில் நடந்த அனுபவங்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மதக் கலவரத் தடுப்பு மசோதா மற்றும் லோக்பால் சட்ட மசோதாக்களையும் மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.