அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்: மன்மோகன்

வருங்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அனைத்து வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என பிரதமர் கூறினார்.
அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்: மன்மோகன்
Published on
Updated on
1 min read

மும்பை, ஜூலை 14: வருங்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அனைத்து வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

மும்பையில் புதன்கிழமை நடந்த குண்டு வெடிப்புகளை "காட்டுமிராண்டித் தனமானது' என்று கூறிய அவர், அதற்குக் காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குண்டுவெடிப்புகள் நடந்ததைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக வியாழக்கிழமை அவர் மும்பை வந்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் வந்தார்.

விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பிரதமரும், சோனியாவும் நிலைமையை ஆய்வு செய்தனர். மகாராஷ்டிர ஆளுநர் கே. சங்கர நாராயணன், முதல்வர் பிருத்விராஜ் சவாண், துணை முதல்வர் அஜீத் பவார், மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் கூறியது: குண்டுவெடிப்பால் மும்பை மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியையும் இழப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களது வலி, துக்கம், கோபம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

இந்தக் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிப்பதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்தச் செயலுக்குக் காரணமானவர்களுக்கு யாரும் எந்த அனுதாபமும் காட்டக்கூடாது. அவர்களை உடனடியாகப் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும்,மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாணையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பணியில் மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று பாதிக்கப்பட்டோருக்கு நாம் உறுதியளிக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல் நடக்காமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.

நமது நாகரிகமான சமூக அமைப்பை அழிக்கவும், மக்களைப் பிரிக்கவும் முயற்சிக்கும் சக்திகளை நமது ஒற்றுமையும் வலிமையுமே தோற்கடிக்கும்.

குண்டுவெடிப்பில் காயமடைந்தோருக்கு மருத்து வசதிகள் உள்ளிட்ட தேவைகளை உடனடியாகக் கவனிக்க வேண்டும். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசை அறிவுறுத்தியிருக்கிறேன்.

குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 1 லட்சமும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன் என்றார் மன்மோகன் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.