புது தில்லி, ஜூலை 14: ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையராக பிரதீப் குமார், வியாழக்கிழமை பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப்குமார் (62), தலைமை கண்காணிப்பு ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் மன்மோகன், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு பிரதீப்குமாரை ஊழல் கண்காணிப்பு ஆணையராகத் தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து பிரதீப்குமாரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்து குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் அறிவிப்பு வெளியிட்டார்.
பிரதீப் குமார் 1972-ம் ஆண்டு ஹரியாணா மாநில ஐஏஎஸ் அதிகாரியாவார். மூன்றாண்டுகள் புதிய பொறுப்பை அவர் வகிப்பார்.
பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரமதர் மன்மோகன் சிங், அமைச்சரவைச் செயலர் அஜீத் சேத், தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 10 நிமிடங்களில் பதவியேற்பு விழா நிறைவடைந்தது.