திருவனந்தபுரம், ஜூலை 14: கேரள மாநிலத்தில் மருத்துவ படிப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சட்டப் பேரவையில் வெளிநடப்பு செய்தது.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் வி.எஸ். சுநீல் குமார், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த விஷயத்தை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். கவன ஈர்ப்புத் தீர்மானமாகக் கொண்டு வந்த அவர், டாக்டர் சோமர்வெல் நினைவு சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் வந்துள்ளதாகக் கூறினார். இதுகுறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, அதிகக் கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார். இது தொடர்பாக புகார் வந்தால் விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறைச் செயலர் அடூர் பிரகாஷ் என்று குறிப்பிட்ட அவர், இதுவரை அரசுக்கு எத்தகைய புகாரும் வரவில்லை என்றார்.
முதல்வர் உறுதியளித்த நிலையில் இதை கவன ஈர்ப்புத் தீர்மானமாக விவாதிக்கத் தேவையில்லை என்று பேரவைத் தலைவர் ஜி. கார்த்திகேயன் கூறினார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.