ஹைதராபாத், ஜூலை 14: தெலங்கானா ஆதரவாளர்கள் தனித் தெலங்கானா மாநிலம் கோரி நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் இப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இப்பிராந்தியத்தில் இயக்கப்படும் 116 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. நீண்ட தொலைவு செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. இருப்பினும் ரயில் மறியலால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
தனித் தெலங்கானா கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக, தெலங்கு தேசம் கட்சியினர் பங்கேற்றனர். தெலங்கானா பிராந்தியத்தில் பல பகுதிகளில் இவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
தனித் தெலங்கானா மாநிலம் உருவாக்கம் குறித்த அறிவிப்பை குறித்த கால வரையறையுடன் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். கட்கேசர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா அரசியல் ஒருங்கிணைப்பு செயல் குழு (ஜேஏசி) ஒருங்கிணைப்பாளர் எம். கோதண்டராம், மத்திய அரசு இன்னமும் ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் இதுகுறித்து உறுதியான அறிவிப்பை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்ட மூத்த தலைவர்களை போலீஸôர் கைது செய்தனர். தெலங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை கைது நடவடிக்கை மூலம் அரசு தடுத்துவிட முடியாது என்று தத்தாத்ரேயா கூறினார். டிஆர்எஸ் சட்டப் பேரவை உறுப்பினர் டி. வினய் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் வாரங்கல் மாவட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் காக்கிநாடா-ஹைதராபாத் இடையிலான கெüதமி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தினர்.
மாநில அமைச்சர் தோட்டா நரசிம்மம் இந்த ரயிலில் பயணம் செய்தார். ரயில் மறியல் காரணமாக பொதுமக்கள் படும் அவதியை அவரும் பட நேர்ந்தது. இருப்பினும் உடனே அவர் கார் மூலம் ஹைதராபாதுக்குச் சென்றார். ஆனாலும் அவரது காரை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாக சேதப்படுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒருங்கிணைந்த ஆந்திராவைக் கோரும் ஆதரவாளர்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
தென் மத்திய ரயில்வே ஏற்கெனவே இவ்வழியாகச் செல்லும் ரயில்கள் பலவற்றை ரத்து செய்திருந்தது. சில ரயில்கள் மாற்று வழியாக இயக்கப்பட்டன. மொத்தம் 116 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தென் மத்திய ரயில்வே அறிவித்தது.