புவனேஸ்வரம்,ஜூலை 14 : பதவியில் இருக்கும் வரை பிரதமரை லோக்பால் விசாரணை அமைப்புக்குள் கொண்டு வரக்கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக வலுவான லோக்பால் அமைப்பு கொண்டு வர வேண்டும் என்று அண்ணா ஹசாரே தலைமையிலான பொதுமக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்டோரும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. லோக்பால் மசோதாவை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் மன் மோகன் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் நீதிபதிகளை லோக் வரம்பிற்குள் கொண்டு வருவதில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இருநாள் பயணமாக ஒரிசா மாநிலம் வந்துள்ளார். அவர், புவனேஸ்வரத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது :
பிரதமரை அவர் பதவியிலிருக்கும் வரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவரக்கூடாது. பிரதமர் மத்திய அரசை நடத்தி செல்லும் பொறுப்பில் உள்ளவர். அவர் பதவியில் இருக்கும் வரை லோக்பால் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது சரியல்ல. இதனால், அவரது பணிகள் பாதிக்கப்படும். பிரதமரை விசாரணை வரம்பிற்குள் கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது குறித்து எனக்கு சில அச்சங்கள் உள்ளன. ஆனால், அவர் பதவி விலகிய அல்லது ராஜிநாமா செய்த அன்றே லோக்பால் விசாரணைக்குட்படுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஊழலைத் தடுக்க கடுமையான சட்டங்கள் தேவைதான்.
போஸ்கோ ஆலை விவகாரம் : ரூ.52,000 கோடியில் ஒரிசாமாநிலத்தில் தென்கொரிய நிறுவனம் அமைக்க உள்ள போஸ்கோ உருக்காலைக்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. தரிசு போன்ற விவசாய பணிக்கு பயன்படாத நிலங்களில் அதை அமைக்க வேண்டும். உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா அருகே பட்டா பர்செüல் கிராமத்தில் விளை நிலங்களை கையகப்படுத்துவதையும் நான் எதிர்த்து வருகிறேன். ஏழை எளியவர்களின் நிலங்களை கட்டாயப்படுத்தி பணம்படைத்தவர்களுக்கு கொடுக்கிறார்கள். விவசாயிகளுக்கு இதனால் என்ன பயன். மறுவாழ்வு நடவடிக்கையாக அவர்களுக்கு அந்நிறுவனங்களில் வேலைக் கிடைக்குமா ? உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதில் பிரச்னை இல்லை. ஆனால், நில உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீடுதான் பிரச்னை.
போஸ்கோ விவகாரத்தில், ஒரிசா அரசு 30 நிபந்தனைகளை ஏற்று கொண்டால், அது பழங்குடியினருக்கு மகிழ்ச்சி அளிக்கும். போஸ்கோ ஆலையை பொறுத்த வரை, காங்கிரஸ் கட்சியில் நிலைப்பாடு ஒன்றுதான். போதிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.