திருவனந்தபுரம், ஜூலை 14: பத்மநாப சுவாமி கோயில் பாதுகாப்புக்கு அளிக்கப்படும் செலவு அனைத்தையும் மாநில அரசே ஏற்கும் என்று கேரள நிதி அமைச்சர் கே.எம்.மாணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் மாணி பேசினார். அப்போது இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பத்மநாப சுவாமி கோயில் ரகசிய அறைகளில் இருந்து விலைமதிக்க முடியாத தங்க, வைர நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அக்கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ.1 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. கோயிலின் பாதுகாப்புக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை உடனடியாக அளிக்க அரசு தயாராக உள்ளது. பாதுகாப்புச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும். அதுபோல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு இணைப்புச்சாலை, சுகாதாரத் திட்டங்களுக்காகவும் மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் பெண்கள் சபரிமலை என அழைக்கப்படும் ஆத்துக்கால் கோயில் வளர்ச்சிப்பணி அதன் சுற்றுப்புற பகுதிகள் மேம்பாட்டுக்கும் ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் மாணி.