மும்பை, ஜூலை, 14: மும்பை மாநகரில் புதன்கிழமை நடந்த குண்டு வெடிப்புகளில் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வியாழக்கிழமை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர்.
அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படும் என்ற உறுதியை அளித்த இரு தலைவர்களும் காயம் அடைந்தவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடைய உறவினர்களைச் சந்தித்து நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், பதற்றம், சோகம் ஆகியவற்றுக்கு உள்ளான அவர்களுக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைப் பேசினர்.
மாநில அரசுக்கு பாராட்டு: விபத்து நடந்தவுடனேயே போலீஸாரும் மீட்புக்குழுவினரும் சம்பவ இடங்களுக்குச் சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றதையும் குழப்பம், கலவரம் இல்லாமல் நன்கு ஒருங்கிணைத்துச் செயல்பட்டதற்கும் மாநில அரசை வெகுவாகப் புகழ்ந்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
சம்பவம் நடந்ததை அடுத்து மும்பைவாசிகளும் வருத்தமும் கோபமும் அடைந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காயம் பட்டவர்களுக்கு உதவிகளை அளித்து ஒத்துழைப்பு அளித்ததையும் இரு தலைவர்களும் பாராட்டினர்.
""மீட்பு, உதவிப் பணிகள் நன்கு நடந்துவிட்டன, இனி அடுத்த வேலை சதிகாரர்களை அடையாளம் கண்டு கைது செய்து அவர்களைச் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவதுதான்'' என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
""இப்படியொரு தாக்குதல் நடைபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை; அரசுக்கு இது குறித்து துப்பு ஏதும் கிடைக்கவில்லை. திடீரென தாக்கும் வாய்ப்பு பயங்கரவாதிகளுக்கே இருக்கிறது. நடந்து முடிந்த பிறகுதான் நாம் செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம்'' என்று ஆதங்கப்பட்டார் பிரதமர்.
மத்திய மும்பையில் உள்ள சயீஃப் மருத்துவமனையில் இரு தலைவர்களும் 25 நிமிஷங்கள் இருந்தனர். காயம் அடைந்த 131 பேர்களில் 37 பேர் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிறகு ஜேஜே மருத்துவமனைக்கும் இருவரும் சென்றனர்.
முன்னதாக மகாராஷ்டிர ஆளுநர் கே. சங்கரநாராயணன், முதலமைச்சர் பிருதிவிராஜ் சவாண், துணை முதல்வர் அஜீத் பவார், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் ஆகியோருடன் மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.