மும்பை, ஜூலை 14: மக்கள் நெருக்கம் மிகுந்த 3 இடங்களில் புதன்கிழமை இரவு அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்த மும்பையில் வியாழக்கிழமை இயல்பு நிலை திரும்பியது.
தெற்கு மும்பையின் ஜவேரி பஜார், மும்பையின் இதயப்பகுதியான தாதர் ரயில் நிலையம் அருகே, சர்ணி ரோடு ஓபரா ஹவுஸ் கலையரங்கம் அருகே என 3 இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் புதன்கிழமை மாலை 7.05 மணி முதல் 15 நிமிட நேர இடைவெளியில் வெடித்துச் சிதறின.
இந்த பயங்கர சம்பவத்தில் 18 பேர் இறந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு ஏராளமான போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதுமே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், மும்பை மக்களைப் பொறுத்தவரை வியாழக்கிழமை காலை வழக்கம்போலவே புலர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற பல சம்பவங்களை மும்பை மக்கள் பார்த்து பழகிப்போனதால், பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலை அப்படி ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை என்றே தோன்றுகிறது.
நகரில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள் வியாழக்கிழமை வழக்கம்போல் இயங்கின.
வணிக, வர்த்தக நிறுவனங்களில் நடவடிக்கைகளும் எப்போதும் போலவே காணப்பட்டது.
"ரயில்களில் எப்போதும் போலவே கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கள் ஊழியர்கள் அனைவரும் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வந்துவிட்டனர்' என்கிறார் தெற்கு மும்பையில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாக பணிபுரியும் ஜான்சன் பெரைரா. மார்கெட், கூலி வேலை போன்றவற்றுக்கு செல்பவர்கள் அதிகாலையே எழுந்து தங்கள் பணி இடங்களுக்கு சென்றுவிட்டனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த நாளான புதன்கிழமை காலையில் மும்பை நகரம் எப்படி இருந்ததோ அப்படியே வியாழக்கிழமை காலையும் காணப்பட்டது என்று மற்றொரு தனியார் நிறுவன அதிகாரி மீரா காமத் குறிப்பிடுகிறார்.