பெங்களூர், ஜூலை 14: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜூலை 27-ம் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1991-96-ம் ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக இப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது, 1996-2001-ம் ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அரசு வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2003-ம் ஆண்டில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கில் சுமார் 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களிக்குமாறு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். பின்னர், சசிகலா தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரராவ், வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கின் முக்கிய சாட்சியான ஆடிட்டர் பாலாஜியை மறுவிசாரணை செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதன் மீதான விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால், வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இதற்கு அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவித்தார். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்காததால், குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 313-ன்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கான தேதியை குறிப்பிட வேண்டுமென்று ஆச்சார்யா வாதிட்டார்.
மேலும், விசாரணையை இழுத்தடிப்பதற்காக மனுக்களை அடுத்தடுத்து தாக்கல் செய்து முட்டுக்கட்டை உருவாக்கப்படுகிறது. இனியும் இதை தொடர அனுமதிக்கக்கூடாது என்றார் ஆச்சார்யா.இதை ஏற்க மறுத்த வெங்கடேஸ்வரராவ், ஒருவேளை பாலாஜியிடம் விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதித்தால், அது சிறப்பு நீதிமன்ற வழக்கு விசாரணையின் போக்கை தீர்மானிப்பதாக அமையும். அதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை 313-ன்கீழ் பதிவு செய்வது சரியானதாக அமையாது என்றார். வழக்கை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி மல்லிகார்ஜுனையா, குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 313-ன்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஜூலை 27-ம் தேதி ஆஜராகி அவரவர் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனிடையே, குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 313-ல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் வாக்குமூலங்களை சமர்பிக்க வழிவகை இருக்கிறது.
அதுகுறித்து விவாதிக்க ஜூலை 27-ம் தேதிக்கு முன்னர் ஒரு தேதியை குறிப்பிட வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் நீதிபதியிடம் முறையிட்டார். இதை முறைப்படி மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இதுகுறித்து விவாதிக்க ஜூலை 25-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.