ஜம்மு, ஜூலை 23: அமர்நாத்திலுள்ள பனிலிங்கத்தைத் தரிசிக்க 24-வது குழு ஜம்முவிலிருந்து சனிக்கிழமை புறப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் இமயமலையில் 13,500 அடி உயரத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இயற்கையாகவே உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிக்க ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு செல்லும் பக்தர்கள் பல்வேறு குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதற்கான நடவடிக்கைகளை ஜம்மு-காஷ்மீர் அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை, ராணுவத்தினர் வழங்கி வருகின்றனர்.இந்த நிலையில் சனிக்கிழமை காலை பனிலிங்கத்தைத் தரிசிக்க ஜம்முவிலிருந்து 24-வது குழு புறப்பட்டது.இந்தக் குழுவில் 2,076 யாத்ரிகர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 1,260 ஆண்கள், 478 பெண்கள், 41 குழந்தைகள், 288 சாதுக்கள் அடங்குவர்.ஜம்முவிலிருந்து மட்டும் இதுவரை 67,267 பேர் யாத்ரிகர்கள் அமர்நாத் சென்றுள்ளனர்.
பல்வேறு முகாம்களிலிருந்து இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் பனிலிங்கத்தை தரிசித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.