லக்னெள, ஜூலை 30: உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை கல்யாண் சிங்கின் ஜன் கிராந்தி கட்சி வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அந்த மாநில முன்னாள் முதல்வரும், ஜன் கிராந்தி கட்சியின் நிறுவனருமான கல்யாண் சிங் தனது கட்சி வேட்பாளர்களை லக்னெளவில் சனிக்கிழமை அறிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முதல்கட்டமாக 108 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 25 முதல் 28-வரை நடைபெற்ற நேர்முகத் தேர்வில் இந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது 35 ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் பட்டியல்களில் மற்ற ஜாதியினருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றார். முன்பு பாஜகவில் இருந்த கல்யாண் சிங், உத்தரப் பிரதேச முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
பேட்டியின் போது உடனிருந்த கல்யாண் சிங்கின் மகனும், கட்சியின் தேசியத் தலைவருமான ராஜ்வீர் சிங், தேர்தலில் போட்டியிட 50 சதவீத இடங்கள் இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும். மொத்தமுள்ள 403 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். தேர்தலுக்கு முன்பும், பின்பும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றார்.