பெங்களூர், ஜூலை 30: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விலகுவேன் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பதவி விலகுவதற்காக அவர் விதித்த சில நிபந்தனைகளை பாஜக மேலிடம் ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர் தனது நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். முன்னதாக கடந்த இருநாள்களாக எடியூரப்பா பதவி விலகுவார் என்றும், விலக மாட்டார் என்றும் மாறிமாறி செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் மேலிடத்தின் நெருக்குதல் காரணமாக பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தான் கூறுபவரைத்தான் அடுத்த முதல்வராக அறிவிக்க வேண்டும் என்பதுதான் எடியூரப்பாவின் முக்கிய கோரிக்கை. அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கையெழுத்துடன் அறிக்கை: பெங்களூரில் உள்ள எடியூரப்பாவின் வீட்டு வாசலில் சனிக்கிழமை ஏராளமான பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் எடியூரப்பாவின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை, அவரது நம்பிக்கைக்குரியவரும், நீர்பாசனத் துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை வாசித்தார். அதில் எடியூரப்பா கையெழுத்திட்டிருந்தார்.
மேலிடத்தின் உத்தரவை ஏற்று ராஜிநாமா செய்வதாக முன்னரே அறிவித்து இருந்தேன். ஆனால் சில ஊடகங்கள் நான் பதவி விலக மறுப்பதாக தவறாக செய்திவெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன. நான் ஏற்கெனவே அறிவித்தபடி ஞாயிற்றுக்கிழமை மதியம் எனது ராஜிநாமா கடிதத்தை அளிப்பேன்' என்று அறிவிப்பில் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
எடியூரப்பாவின் கோரிக்கையை பாஜக மேலிடம் ஏற்றுக் கொண்டதா என்ற கேள்விக்கு, "மேலிடத் தலைவர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங்குடன், முதல்வர் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார். அங்கு என்ன பேசினர், என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து பிரச்னைகளும் சுமுகமாகத் தீர்க்கப்படும்' என்றார் பசவராஜ் பொம்மை.
இன்று பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம்: புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க பாஜக சட்டப் பேரவைக் குழு பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.
எடியூரப்பா பதவி விலகும் விவகாரம் தொடர்பாக, பாஜக மேலிடத் தலைவர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி மற்றும் கர்நாடக மாநில பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் மாநில பாஜகவினரின் கருத்துகளைக் கேட்டு வருகின்றனர்.
மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் ஆர். அசோக் செய்தியாளர்களிடம் கூறியது: ராஜிநாமா செய்ய எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் கட்சியில் எந்தவிதமான கொந்தளிப்பும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.
முதல்வர் யார்? ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், எடியூரப்பாவுக்கு நெருக்கமான அமைச்சர் ஷோபா கரந்த்லஜே, பாஜக மாநிலத் தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா, மக்களவை உறுப்பினர் சதானந்த் கெüடா, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா, சட்டம், நீதித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அனந்த குமார் ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
68 வயதாகும் எடியூரப்பா தலைமையில் தென் மாநிலமான கர்நாடகத்தில் 2008-ஆம் ஆண்டு மே மாதம் பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் எடியூரப்பா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இடையே உள்கட்சி பூசலும் உருவானது. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து இதுநாள் வரை எடியூரப்பா தனது பதவியைக் காப்பாற்றி வந்தார். ஆனால் சட்டவிரோத சுரங்க குற்றச்சாட்டு அவரது பதவியைப் பறித்து விட்டது.