ஹைதராபாத், ஜூலை 30: ஆந்திரத்தின் ஆதிலாபாத் மாவட்ட பதிவாளரான மல்லிகார்ஜுன ராவ் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்துள்ளார்.
ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ரூ.1.48 கோடிக்கு சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஆதிலாபாத்தில் உள்ள அலுவலகம், கரீம் நகரில் உள்ள வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் சில ஆவணங்கள் சிக்கின. அதன் மூலம் மல்லிகார்ஜுன ராவுக்கு ரூ.1.48 கோடி சொத்து இருப்பது தெரியவந்தது.
ஒரு வீடு, 12 வீட்டு மனைகள், 3 ஏக்கர் விவசாய நிலங்கள், ரூ.1.16 லட்சம் ரொக்கம் மற்றும் கணிசமான தங்க நகைகள் மல்லிகார்ஜுன ராவுக்கு உள்ளன.
இவற்றின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.3 கோடிக்கு மேல் இருக்கவும் வாய்ப்புள்ளது என்று ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக மல்லிகார்ஜுன ராவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.