
புது தில்லி, டிச. 27: "ஜன கண மன...' தேசிய கீதத்தின் 100-வது ஆண்டு பிறந்த நாள் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சம்ஸ்கிருதம் கலந்த வங்க மொழியில் ரபீந்திரநாத் தாகூர் எழுதிய இப் பாடல் 1911 டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதன்முறையாகப் பாடப்பட்டது.
அன்றுமுதல் நாட்டின் பட்டி, தொட்டியெல்லாம் ஜன கண மன இசைக்கப்பட்டு மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் தொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசிய ராணுவப் படையின் தேசிய கீதமாக இந்தப் பாடலை அறிவித்தார்.
1946-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேசத் தந்தை மகாத்மா காந்தி "ஜன கண மன...' பாடல் தேசிய நீரோட்டத்தில் மிக உயரிய இடத்தைப் பிடித்துள்ளது என்று புகழாரம் சூட்டினார். இப் பாடல் இசைவடிவம் பெற்ற இடம் ஆந்திரத்தின் ராயலசீமை பகுதியில் உள்ள மதனபள்ளி என்ற குக் கிராமம். பாடலுக்கு தாகூரே இசையமைத்தார்.
வடக்கில் எழுத்துருவும், தெற்கில் இசையுருவும் பெற்ற இப் பாடல் இந்தியர்கள் அனைவரின் மனதிலும் தேசப் பக்தியை பொங்கியெழுச் செய்து விடுதலைக்கு வித்திட்டது.
நாடு சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1950 ஜனவரி 24-ம் தேதி "ஜன கண மன...' தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1911-ல் கொல்கத்தாவில் அரங்கேறிய இப் பாடலுக்கு இப்போது 100 வயதாகிறது. அதன் பிறந்த நாளை தில்லி, கொல்கத்தா உள்பட நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.