கும்பகோணம் பள்ளி தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிக்கை நிராகரிப்பு

புதுதில்லி, செப். 26:கும்பகோணத்தில் 2004-ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகர

புதுதில்லி, செப். 26:கும்பகோணத்தில் 2004-ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

 எந்த இழப்பீடு கொடுத்தாலும் உயிரிழப்பை ஈடு கட்ட முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில், உங்களுக்கு ஏற்கெனவே போதுமான இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. மேலும், அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கூறியது.

 கும்பகோணம் தீ விபத்தால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் அதிக இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் 7 வயதிலிருந்து 11 வயதுக்குள்பட்ட 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.

 இச்சம்பவம் நடந்து ஆறரை ஆண்டுகளுக்கு மேலாகியும் உயிரிழந்தோர் மற்றும் காயமுற்றோர் குடும்பத்தினருக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. காயமடைந்த மாணவர்களின் மறுவாழ்வுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சிகிச்சைகள் ஏதும் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் கருணைத் தொகையாகவும் கடுமையாகக் காயமுற்றோருக்கு தலா ரூ. 25 ஆயிரமும் லேசாகக் காயமுற்றவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்பட்டன என்றும்: ஆனால், மருத்துவ வசதி செய்து தருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com