புது தில்லி, பிப். 11: இந்தியா ஹாபிடேட் சென்டரில் "சுநாத்' அமைப்பின் சார்பில் 2 நாள்கள் நடைபெற்ற சங்கமம்-2012 எனும் சாஸ்திரிய சங்கீத விழா, இசை ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியை மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
தொடக்கமாக, விதுஷி சரஸ்வதி ராஜகோபாலனின் வீணை இசையும், உஸ்தாத் இசைக் கலைஞர் சயீத் ஜாஃபர்கானின் சித்தார் இசையும் நடைபெற்றன.
இருவரும், கீரவாணி ராகத்தில் கர்நாடக, ஹிந்துஸ்தானி இசையைப் புரிதலுடன் மீட்டினர். இது இசைப் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதைத்தொடர்ந்து, இசைக் கலைஞர் பத்மஸ்ரீ டாக்டர் என்.ரமணியின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
2-ம் நாளான வெள்ளிக்கிழமை மாலை கிரனவாலி வித்யாசங்கரின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டை, ஹம்ஸத்வனி, தோடி, பேஹாக் உள்ளிட்ட பல ராங்களில் கீர்த்தனைகள், பாடல்கள் பாடினார். சுமார் 1 மணி நேரம் இக்கச்சேரி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞர் பத்மபூஷண் டி.வி.சங்கர நாராயணன் குழுவினரின் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
"சுடர் மணியே போற்றி... விநாயகனே போற்றி...' என்னும், தான் இயற்றிய விருத்தத்தைப் பாடி தொடக்கத்திலேயே ரசிகர்களைத் தனது இசையால் கட்டிப்போட்டார் டி.வி. சங்கர நாராயணன்.
தொடர்ந்து "சீதம்மா... மாயம்மா' எனும் வசந்தா ராகத்தில் அமைந்த ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனையைப் பாடிப் பரவசப்படுத்தினார்.
இளம் இசைக் கலைஞர் மகாதேவன் சங்கரநாராயணன், சண்முகப்பிரியா ராகத்தில் தனி ஆலாபனை செய்தார்.
தொடர்ந்து, "வள்ளி நாயகனே...' எனத் தொடங்கும் ஹரிகேசவநல்லூர் முத்தையா பாகவதரின் கிருதியை டி.வி. சங்கரநாராயணன் பாடினார்.
கச்சேரியில் முக்கிய கீர்த்தனமாக காம்போதி ராகத்தில் அமைந்த "கபாலியில் காண கண் கோடி வேண்டும்...' எனத் தொடங்கும் பாபநாசம் சிவனின் கிருதி விஸ்தாரமாகப் பாடப்பட்டது. இதே பாடலில் கும்பகோணம் என். பத்மநாபன் தனி ஆவர்த்தன மிருதங்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நிரவல் பாடப்பட்டது.
"எப்போ வருவாரோ' எனத் தொடங்கும் ஜோன்புரி ராகத்தில் அமைந்த மதுரை மணி ஐயரின் பாணி பாடலைப் பாடி ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தளித்தார்.
மனத்தைக் குளிர்வித்த பாட்டுக்கு ஏற்ப கும்பகோணம் என். பத்மநாபன் மிருதங்கமும், சி.எஸ். அனுரூப் வயலினும் வாசித்தனர். இதனால், கச்சேரி களை கட்டியது. பாடலில் மெய்ம்மறந்து ரசிகர்கள் பலர் தலையசைத்தவாறு இருந்தனர். மொத்தத்தில் இரு நாள் இசை நிகழ்ச்சியும் இசைப் பிரியர்களைக் கவர்வதாகவே அமைந்திருந்தது.