ராய்பரேலி, பிப்.11: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நிலவி வரும் எதிர்மறை அரசியலை மாற்றுங்கள் என்று மாநில மக்களை பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
அஹியார் பகுதியில் உள்ள சரெய்னி சட்டப்பேரவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அசோக் சிங்கை ஆதரித்து சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியது:
""வாக்காளர்கள் தீவிரமாக சிந்தித்து, கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் எதிர்மறையான அரசியலை மாற்ற வேண்டும். உங்களின் வாக்கு உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். மக்களின் வளர்ச்சிக்காக உழைக்கவில்லை எனில், அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று தலைவர்கள் உணர வேண்டும். அரசியலில் மாற்றம் ஏற்பட்டாலேயே இது சாத்தியமாகும்.
அமேதி மற்றும் ராய்பரேலி தொகுதிகளுடன் எனக்கு ஏற்பட்டுள்ள தொடர்பு அரசியல் ரீதியான உறவு மட்டுமல்ல, குடும்ப ரீதியாகவும் ஏற்பட்டதாகும். உங்களிடம் வாக்கு கோருவதற்காக நான் இங்கு வரவில்லை. உங்களிடையே மாற்றம் ஏற்படுத்தவே வந்துள்ளேன். இல்லையெனில் இனவாத சக்திகள் மக்களை தவறாக வழிநடத்தி அவர்களின் எதிர்காலத்துடன் விளையாடிவிடும்.
வளர்ச்சி என்பது உங்களின் உரிமை. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தலைவர்களோ அவர்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிக் கடனாகவே வளர்ச்சியை நினைக்குமளவுக்கு தாழ்ந்துள்ளார்கள். காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்களை ஏமாற்றி வருகின்றன. அவர்கள் தங்களது வசதிகளைத்தான் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். உத்தரப் பிரதேசத்தில் ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும் வலுப்படுத்தும் வகையிலான அரசை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மத்திய அரசைப் பொறுத்தவரை தாராளமாக நிதியுதவி செய்துள்ளது. ஆனால் மாநில அரசு அந்த நிதியை மக்களுக்குச் செலவிடாமல், தனது சுயவளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில்லை. மக்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. ஊழலும், வன்முறையுமே ஊக்குவிக்கப்பட்டுள்ளது'' என்றார் பிரியங்கா.