லக்னெள, பிப். 11: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான 2வது கட்டத் தேர்தல் சனிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 59 சதவீத வாக்குகள் பதிவாயின.
சந்த் கபீர் நகர், மகராஜ்கஞ்ச், கோரக்பூர் (கோரக்ஷணபுரி), குஷிநகர், தியோரியா, ஆசம்கர், மாவ், பல்லியா, காஜிபூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 59 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில், 1098 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 1.92 கோடி வாக்காளர்களில் 59 சதவீதப் பேர் தங்கள் வாக்குரிமையைச் செலுத்தினர்.
இந்த 2வது கட்டத் தேர்தலில் 31 எம்.எல்.ஏ.க்களும் 24 முன்னாள் அமைச்சர்களும் போட்டியிடுகின்றனர்.
பேரவைத் தலைவர் சுக்திவோ ராஜ்பர், மாநில வருவாய்த் துறை அமைச்சர் பகு செüகான், பகுஜன் சமாஜ கட்சியின் மாநிலத் தலைவரும் அமைச்சருமான சுவாமி பிரசாத் மெüர்யா, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சூரியபிரதாப் ஷாஹி ஆகியோர் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.
பாதுகாப்பு: கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தத் தேர்தல் மந்தமாகவே தொடங்கியது.
ஒருசில சம்பவங்கள் தவிர பெருவாரியாக அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது என்று தேர்தல் ஆணையமும் காவல்துறையும் தெரிவித்தன.
மாவ் மாவட்டத்தில் உள்ள தக்ஷிண தோலா பகுதியில், வாக்குச் சாவடிக்கு வெளியே அமளியில் ஈடுபட்ட வாக்காளர்களை தடியடி நடத்தி போலீஸôர் கலைந்துபோகச் செய்தனர்.
பல்லியா மாவட்டத்தில் ராஸ்ரா பகுதியில் மகாவீர் அகாரா எனும் குக்கிராமத்தில் வாக்குச்சாவடிக்கு எதிரே கோஷமிட்ட வாக்காளர்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தினர்.
மேலும், இதே மாவட்டத்தில் பீடா எனும் ஊரிலும் ஆசம்கர் மாவட்டத்தில் ஹதியா எனும் ஊரிலும் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த சம்பவங்களும் நடந்தன.
மொத்தம் 403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பல கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது.