பெங்களூர்,பிப்.11: கர்நாடக மாநிலத்தின் புதிய அட்வகேட் ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் எஸ். விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வாதிட்டு வரும் பி.வி. ஆச்சார்யா, தனது அட்வகேட் ஜெனரல் பதவியை பிப்ரவரி 9-ம் தேதி ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், முதல்வர் சதானந்த கெüடாவின் பரிந்துரையின்பேரில் புதிய அட்வகேட் ஜெனரலாக எஸ். விஜயசங்கரை நியமித்து ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜ் வெள்ளிக்கிழமை இரவு உத்தரவு பிறப்பித்ததாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள விஜயசங்கர், ஏற்கெனவே 1996 ஜூன் மாதம் முதல் 1999 அக்டோபர் மாதம் வரை கர்நாடக அட்வகேட் ஜெனரலாகப் பதவி வகித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடந்த நதி நீர் நடுவர் மன்றங்கள் தொடர்பான வழக்கில் கர்நாடக அரசின் சார்பில் ஆஜராகியுள்ளார். மேலும் சில முக்கியமான வழக்குகளிலும் கர்நாடக அரசு சார்பில் வாதிட்டு வெற்றி தேடித் தந்துள்ளார்.
இவர் கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம். சதாசிவய்யாவின் மகன் ஆவார்.