குர்ஷித் விவகாரம்: தலையிடக் கோரி பிரதிபாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புது தில்லி, பிப். 11: தேர்தல் நடத்தை விதிகளை மீறி முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு பற்றிப் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விவகாரம் தொடர்பாக, "உடனடியாக தீர்மானமான' தலையீட்டினை மேற்கொள்ள
குர்ஷித் விவகாரம்: தலையிடக் கோரி பிரதிபாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
Published on
Updated on
1 min read

புது தில்லி, பிப். 11: தேர்தல் நடத்தை விதிகளை மீறி முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு பற்றிப் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விவகாரம் தொடர்பாக, "உடனடியாக தீர்மானமான' தலையீட்டினை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சனிக்கிழமை இரவு "புகார் கடிதம்' மூலம் கேட்டுக்கொண்டது.

 மத்திய சட்ட அமைச்சராக இருக்கும் ஒருவர் தேர்தல் ஆணையத்தை பலப்படுத்துவதற்கு மாறாக, அவரே பலவீனப்படுத்தும் விதத்தில் பேசி வருவதும்; அரசியல் சாசன சட்டத்தின் படி அவரது கடமையை களங்கப்படுத்தும் விதமாக அவர் நடந்து கொள்வதும் தேர்தல் ஆணையத்தை துணுக்குற வைக்கிறது என்று ஆணையம் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஒரு மத்திய அமைச்சருக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருப்பது முன்னெப்போதும் இருந்திராத ஒன்றாகும்.

 தேர்தல் பிரசாரத்தின்போது முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு குறித்து பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது.

 அப்படியிருந்தும், "தேர்தல் ஆணையம் என்னை தூக்கில் போட்டாலும் நான் உள் ஒதுக்கீடு பற்றிப் பேசியே தீருவேன்' என்று சல்மான் குர்ஷித் பேசினார். அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் இப்போது புகார் கடிதம் அனுப்பியுள்ளது.

 நடவடிக்கை: இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் புகார் மீது "உரிய நடவடிக்கை' எடுக்குமாறு குடியரசுத் தலைவர் அலுவலகம் பிரதமர் அலுவலகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்காக ஆணையத்தின் புகார் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.

 பாஜக கோரிக்கை: மத்திய சட்ட அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்; இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன என்பதை பிரதமர் மன்மோகன் சிங் தெளிவுபடுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நாக்வி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.