ஜம்மு, பிப்.11: பள்ளித் தேர்வு முறைகேடு தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் அமைச்சரவையில் தொடர்வார் என்று மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீர்ஸதா முகமது சயீத்.
சயீத்தின் வளர்ப்பு மகன் 10-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக விடைத்தாளில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் குற்றப்பிரிவு போலீஸôர் விசாரணை செய்து பிப்ரவரி 7-ம் தேதி அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து சயீத் தனது ராஜிநாமா கடிதத்தை வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்.
இது குறித்து சயீத் கூறியது:
எனது ராஜிநாமா கடிதத்தை சோனியா ஏற்கவில்லை. என்னைத் தொடர்ந்து பணிபுரியுமாறு அவர் அறிவுறுத்தினார். மாநிலத்தில் எங்களுடைய கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. என் மீது பொய்யான குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
கல்வித் துறை பறிக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, அது முதல்வரின் முடிவு. அது பற்றி எனக்குத் தெரியாது என்று தெரிவித்தார்.
"இது குறித்து வழக்கு நடந்து வருகிறது. குற்றச் சாட்டு உண்மையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று முதல்வர் தெரிவித்தார்.