புது தில்லி, பிப்.11: வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய நிறுவன சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற வர்த்தக சம்மேளன நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியது:
இந்த மசோதா தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரிடம் கலந்தாலோசித்தேன்.
அப்போது இந்த புதிய நிறுவன மசோதாவை மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு (நிதி) அனுப்ப முடிவுசெய்யப்பட்டு, அனுப்பப்பட்டுவிட்டது. நிலைக்குழுவும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்பட்டுவிடும் என்று நம்புகிறேன் என்றார்.
முன்னதாக இந்த நிறுவன மசோதா 2011 குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து இந்த மசோதா கைவிடப்பட்டது.
இப்போது சில மாற்றங்களுடன் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால் இப்போது மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த புதிய மசோதா, நிறுவனங்களின் சமூக பொறுப்பு, பொது மக்களிடம் இருந்து நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு கடுமையான சட்டங்கள் உள்ளிட்டவற்றை கொண்டதாக உள்ளது. நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் உயரதிகாரிகள் தங்களுக்குள்ளாகவே பெருமளவில் பங்குகளை விற்பனை செய்வதை இந்த மசோதா தடை செய்கிறது. அப்படி விற்பது கிரிமினல் குற்றம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் 2 சதவீதத்தை சமூக பணிகளுக்கு செலவிடுவதோடு, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதைத் தெரிவிக்க வேண்டும். தங்களின் பங்குதாரர்களுக்கும் அனைத்து விவரங்களையும் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1956-ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்துக்கு மாற்றாகவும், உலக வளர்ச்சியில் நிறுவனங்களின் செயல்பாடுகளை நவீனமயமாக்கும் வகையிலும் இந்த புதிய மசோதா கொண்டுவரப்படுகிறது.