Enable Javscript for better performance
பாஜகவிலிருந்து விலகினார் எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவிலிருந்து விலகினார் எடியூரப்பா

    By dn  |   Published on : 01st December 2012 01:10 AM  |   அ+அ அ-   |    |  

    narendramodi

    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெள்ளிக்கிழமை விலகினார். மேலும், அவர் தனது எம்எல்ஏ பதவியையும் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

    பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரிக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பிய அவர், பெங்களூர் சுதந்திரப் பூங்காவில் நடைபெற்ற தனது கர்நாடக ஜனதா கட்சி கூட்டத்தில் பேசியது:

    பாஜக எனக்கு எல்லா பதவிகளையும் அளித்தது. நான் பாஜகவில் தொடர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்கிறேன்.

    கர்நாடக முதல்வராக நான் தொடர்வதை விரும்பாத சிலர் என்னைக் குற்றவாளியாக சித்திரித்தனர். இதையெல்லாம் ஓராண்டாகச் சகித்துக் கொண்டேன். மனவேதனையும், கனத்த இதயத்துடனும் பாஜகவிலிருந்து விலகுகிறேன். எனது ராஜிநாமா கடிதத்தை நிதின் கட்கரிக்கு தொலைநகல் மூலம் அனுப்பிவிட்டேன் என்றார் அவர்.

     

    கண்ணீர்: பின்னர், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ, சுதந்திரப் பூங்காவில் இருந்து விதானசெüதாவுக்கு ஊர்வலமாகச் சென்ற எடியூரப்பா, அங்கு கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் கே.ஜி.போப்பையாவைச் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட போப்பையா, எனக்கு இந்த நிலைமை வரவேண்டுமா என்று கண்ணீர் மல்கக் கூறினார். அப்போது எடியூரப்பா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கண்ணீர் சிந்தினர்.

    ராஜிநாமா கடிதத்தை ஏற்று, அதற்கான உத்தரவை உடனடியாக போப்பையா பிறப்பித்தார்.

    ஆதரவாளர்களுடன் ஆலோசனை: முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு டாலர்ஸ் காலனி இல்லத்தில் தனது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, சி.எம்.உதாசி, உமேஷ்கத்தி, ஷோபா கரந்தலஜே, பி.ஜே.புட்டசாமி, சோமண்ணா, சுனில்குமார் வல்லாபுரா, ரேவுநாயக் பெலமகி, எம்.எல்.ஏ.க்கள் பி.பி.ஹரீஷ், நேரு ஓலேகர், தரிகெரே சுரேஷ், ஹர்தாள் ஹாலப்பா, எம்.எல்.சி.க்கள் லட்சுமிநாராயண், பாரதிஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான ஷிமோகாவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எடியூரப்பாவின் வீட்டு முன் திரண்டனர்.

    ராஜிநாமா கடிதம்: நிதின் கட்கரிக்கு எடியூரப்பா அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 40 ஆண்டுகள் பணியாற்றிய பாஜகவில் இருந்து விலகும் அதீத முடிவை கட்டாயத்தின் பேரில் எடுத்துள்ளேன். என்னுடன் பணியாற்றியவர்களே என்னைச் சந்தேகித்து விமர்சிக்கத் தொடங்கினர். மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திய போதும், அந்தக் கட்சியினர் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்க முடியாமல் கர்நாடக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தேன். கட்சியில் இருந்து நான் விலகினாலும், யார் மீதும் எனக்கு வருத்தம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    kattana sevai