Enable Javscript for better performance
காவிரி: தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    காவிரி: தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

    By dn  |   Published on : 03rd December 2012 05:00 AM  |   அ+அ அ-   |    |  

    Supreme

    காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தேவையான தண்ணீர் பெறுவது  தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையாக உள்ள காவிரி நீர் தொடர்பான இந்த விசாரணை தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காவிரி நதி நீர்ப் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருக்கு வியாழக்கிழமை (நவம்பர் 29) சென்று, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சு நடத்தினார். ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுத்துவிட்டது.

    இதையடுத்து தமிழகத்துக்கு எவ்வளவு நீர் வேண்டும் என்பது குறித்து தமிழக அரசும் கர்நாடக அணைகளில் நீரின் அளவு, அவர்களுக்கான தேவை குறித்து கர்நாடக அரசும் அறிக்கைகளைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகுர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    "சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரைக் காப்பாற்ற தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு குறைந்தபட்சம் 30 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உடனடியாக உத்தரவிட வேண்டும்' என்று தமிழக அரசும், "போதிய நீர் இல்லை' என்று கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனி அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளன. இந்த அறிக்கைகள் மீதுதான் இப்போது விசாரணை நடைபெறவுள்ளது.

    10 பக்க அறிக்கையையும் அதற்கு ஏதுவான 122 பக்கங்கள் கொண்ட விவர அறிக்கையையும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

    மத்திய அமைச்சர் வேண்டுகோள்:  காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக, கர்நாடக மாநில அரசுகள் பரஸ்பரம் பிரச்னைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவத் வேண்டுகோள் விடுத்தார்.

    தில்லியில் "வங்கிக் கணக்குகளில் மானியத் தொகை' செலுத்தும் அரசின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஹரீஷ் ராவத் தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

    இது "உணர்வுபூர்வமான' விவகாரம்; இதில் தொடர்புடைய இரு மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளதால் விரைவில் சுமுக முடிவு எட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு ஹரீஷ் ராவத் அளித்த பதில்:

    காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பற்றிய செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். இந்தப் பிரச்னை தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழக, கர்நாடக மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவுக்காகவும் காத்திருக்கிறோம். நீண்ட நாள்களாக உள்ள இந்த சிக்கலான பிரச்னை உணர்வுபூர்வமானது.

    இந்த பிரச்னையில் இரு மாநில அரசுகளுக்கும் தொழில்நுட்ப ரீதியில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளித்து வருகிறது. இதன் மூலம் இந்த பிரச்னைக்கு சுமுகத் தீர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். இரு மாநில அரசுகளும் பிரச்னைகளை பரஸ்பரம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    kattana sevai