Enable Javscript for better performance
நரேந்திர மோடியைப் பின்பற்றுங்கள்: மாநிலங்களுக்கு அத்வானி அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    நரேந்திர மோடியைப் பின்பற்றுங்கள்: மாநிலங்களுக்கு அத்வானி அறிவுரை

    By dn  |   Published on : 04th December 2012 12:37 AM  |   அ+அ அ-   |    |  

    ADVANI1

    வளர்ச்சிக்கு முன்னுதாரணமாகத் திகழும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியிருக்கிறார்.

    குஜராத்தில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி காந்திநகர் மாவட்டத்தில்  திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

    மோடி பிரதமர் பதவிக்குத் தகுதியுள்ளவர் என பா.ஜ.க.வின் மற்றொரு மூத்த தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் சமீபத்தில் கருத்து கூறியதைத் தொடர்ந்து அத்வானியும் தமது கருத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத் தகுந்தது.

    அவர் மேலும் பேசியது: மத்தியில் காங்கிரஸ் ஆண்டுவரும் நிலையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. புதிது புதிதாக முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பெரும் வளர்ச்சிப் பணிகளை மோடி மேற்கொண்டுள்ளார். எவ்வாறு ஆட்சிபுரிய வேண்டும், எவ்வாறு அதிகாரத்தைப் பயன்படுத்தி எளியோர்க்கும் ஆதரவுக் கரம் நீட்டுவது என்பதில் மற்ற மாநிலங்களுக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

    அவரைப் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். பழங்குடியினருக்கும் மீனவர்களுக்கும் பயன்படும் விதமாக அவர் பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது பாராட்டத்தக்கது என அத்வானி கூறினார்.

    நரேந்திர மோடி குறித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறிய கருத்தைத் தொடர்ந்து அத்வானி இவ்வாறு தெரிவித்திருப்பது பாஜகவைப் பொருத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    மோடி வெற்றிகரமான முதல்வராக உள்ளதால், கட்சியில் பிரதமராவதற்குத் தகுதியுள்ளவர்களில் அவர் பெயர் முன்னிலையில் உள்ளது என அருண் ஜேட்லி கூறியிருந்தார்.

    பாஜகவின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் கோபிநாத் முண்டே சுஷ்மா கருத்தில் திருப்தி தெரிவித்ததோடு மோடி பிரதமர் பதவி வகிக்கும் திறன் உள்ளவர் எனக் கூறியிருந்தார்.

    அடுத்த பொதுத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கக் கூடும் என்பது கட்சியில் பொதுவாக நிலவும் கருத்துதான்; அது யாருடைய தனிப்பட்ட கருத்தும் அல்ல என பிகார் மாநில பாஜகவின் தலைவர் சி.பி.தாகுர் குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்கள் பலர் பாஜகவில் உள்ளனர். இதில் யாரை முன்னிருத்துவது என்பதை உரிய நேரத்தில் கட்சி முடிவு செய்யும் என செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டுள்ளார்.

    kattana sevai