சுடச்சுட

  
  Siddaramaiah

  காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால் கர்நாடகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா எச்சரிக்கை விடுத்தார்.

  பெல்காமில் புதன்கிழமை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசியது: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரை 5 நாள்களுக்கு திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, தமிழகத்துக்கு 5 டிஎம்சி திறந்துவிட நேரிடும். நம்மிடம் 37 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இதில், 5 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு அளித்துவிட்டால், கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

  மேலும், பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோடைக்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிடக் கூடாது. தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு, கர்நாடகத்தில் நிலவும் நீர்த் தேவையை எப்படி சமாளிக்க முடியும்?

  உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால், கர்நாடகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்; போராட்டம் வெடிக்கும். சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் நிலைமை உருவாகும். ஏற்கெனவே போராட்டம் நடத்தி ஓய்ந்து போயிருக்கும் மக்கள் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்க நேரிடும் என்றார் அவர்.

  இதே கருத்தை மஜத சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் எச்.டி.ரேவண்ணா மற்றும் இதர உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai