சுடச்சுட

  

  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மக்களவை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி

  Published on : 06th December 2012 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  IndiaParliment

  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ.) அனுமதிப்பதை எதிர்க்கும் தீர்மானம் மீது மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. வாக்கெடுப்பின்போது முலாயம் சிங்கின் சமாஜவாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ததால் இந்த வெற்றி சாத்தியமானது.

  இதேபோல், அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் (ஃபெமா) திருத்தம் கோரி திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் கொண்டுவந்த தீர்மானமும் அவையில் தோற்கடிக்கப்பட்டது. எஃப்.டி.ஐ. முடிவை அமல்படுத்த ஏதுவாக, இச்சட்டத்தில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட மாற்றங்களை ரத்து செய்யக் கோரி இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து 254 வாக்குகளும், ஆதரித்து 224 வாக்குகளும் பதிவாயின.

  மத்திய அரசின் எஃப்.டி.ஐ. முடிவை எதிர்க்கும் தீர்மானத்தை மக்களவையில் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் கொண்டு வந்தார். இது தொடர்பாக புதன்கிழமையும் விவாதம் தொடர்ந்தது. விவாதத்தின் இறுதியில், மாலையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அரசுக்கு எதிராக 218 வாக்குகளும், அரசை ஆதரித்து 253 வாக்குகளும் பதிவாயின.

  மொத்தம் 545 எம்.பி.க்கள் கொண்ட அவையில், 471 எம்.பி.க்கள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். முலாயம் சிங்கின் சமாஜவாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர். விவசாயிகள் மற்றும் சிறு வர்த்தகர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அரசின் நிர்வாக முடிவு ஒன்று இப்போதுதான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  அவையில் இரு தினங்களாக நடந்த விவாதத்துக்குப் பின் கிடைத்த வெற்றியைப் பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். பிரதமர் கூறுகையில், ""நாங்கள் அமல்படுத்திய எஃப்.டி.ஐ. முடிவுக்கு இப்போது அவையின் (மக்களவை) ஒப்புதல் கிடைத்துள்ளது'' என்று தெரிவித்தார்.

  எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:

  முன்னதாக, எஃப்டிஐ தீர்மானத்தைக் கொண்டு வந்து சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், ""சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்க்கின்றனர். இத்தீர்மானத்தை ஆதரிக்கும் பல்வேறு கட்சித் தலைவர்களிடம் 282 வாக்குகளும், தீர்மானத்துக்கு எதிரானவர்களிடம் 224 வாக்குகளும் உள்ளன. 18 கட்சிகளைச் சேர்ந்த 22 தலைவர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். அவர்களில் 14 பேர் தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். எனினும், இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்து சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் வெளிநடப்பு செய்து விட்டதால் நான் நினைத்தது நடக்கப் போவதில்லை'' என்றார்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பாசுதேவ் ஆசார்யா பேசுகையில், ""சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். பிரதமர் ஏற்கெனவே மாநிலங்களைவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எஃப்.டி.ஐ. முடிவை எதிர்த்தார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி இது தேசவிரோத முடிவு என்றார். இந்த விஷயத்தில் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் அரசு மாற்றிக் கொண்டுவிட்டது'' என்று தெரிவித்தார். பா.ஜ.க. மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி பேசுகையில், ""சில்லறை வர்த்தகத்தில் ஜனநாயகம் வேண்டுமே தவிர சர்வாதிகாரம் இருக்கக் கூடாது என்பதே எங்கள் கட்சியின் நிலை. அது போன்ற நடவடிக்கையை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்'' என்று எச்சரித்தார்.

  அரசுத் தரப்பு பதில்: விவாதத்தின்போது, அரசுத் தரப்பில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா பேசுகையில், எஃப்.டி.ஐ. முடிவால் சிறு வர்த்தகர்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அரசு அவசர கதியில் இதை அமல்படுத்துகிறது என்றும் எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டை மறுத்தார்.

  அவர் பேசுகையில், ""இந்த முடிவு ஒரே இரவில் எடுக்கப்படவில்லை. முதல்வர்கள் மற்றும் விவசாயிகள், நுகர்வோர் அமைப்புகள், உணவு பதப்படுத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று பலரையும் கலந்து ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசு கருத்து கேட்ட 21 மாநிலங்களில் 11 மாநிலங்கள் இந்த முடிவுக்கு தங்கள் ஆதரவை எழுத்துமூலம் தெரிவித்தன.

  வெறும் 7 மாநிலங்கள்தான் இந்த முடிவை எதிர்த்துள்ளன. சில மாநிலங்கள் இது குறித்து மேலும் விளக்கமளிக்குமாறு எங்களிடம் கோரியுள்ளன. நானே நேரடியாக பஞ்சாப் முதல்வர் பாதல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்தேன்.

  நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற இறுதி முடிவை எடுப்பதை மாநிலங்களிடமே விட்டுவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முடிவெடுக்கும் அதிகாரத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இருந்து யாரும் பறித்துவிட முடியாது. கருத்தொற்றுமை என்பதற்கு பொது உடன்பாடு என்றுதான் அர்த்தமே தவிர ஒருமனதாக முடிவெடுத்தல் என்று அர்த்தமல்ல'' என்று தெரிவித்தார்.

   

  தெலங்கானா காங்கிரஸ் எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்பு

  புது தில்லி, டிச. 5: மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் தெலங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

  முன்னதாக தெலங்கானா பிரச்னையை முன்வைத்து வாக்கெடுப்பை புறக்கணிக்கப் போவதாக இவர்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு தெலங்கானா பிரச்னை தொடர்பாக வாக்குறுதி அளித்து சமாதானப்படுத்தியது காங்கிரஸ்.

  தெலங்கானா பிரச்னை குறித்து விவாதிக்க டிசம்பர் 28ஆம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் உறுதிமொழி தரப்பட்டது.

  இதனை ஏற்றுக் கொண்ட தெலங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரும் வாக்கெடுப்பில் பங்கேற்று அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

   

  வெளிநடப்பு ஏன்? முலாயம் சிங் விளக்கம்

  புது தில்லி, டிச. 5: விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலனை அரசு புறக்கணித்ததால், மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.

  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம்,

  5 கோடி சிறு வணிகர்கள், 20 கோடி விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனை மத்திய அரசு புறக்கணித்து விட்டது. எனவே, எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். வெளிநடப்பு செய்ய வேண்டும் என கட்சி முடிவு செய்தது என்றார்.

  சமாஜவாதி கட்சியினர் வெளிநடப்பு செய்தது அரசுக்கு சாதகமாக அமைந்ததைச் சுட்டிக்காட்டிய போது,"கட்சி என்ன முடிவு செய்ததோ அதைச் சரியாக நிறைவேற்றினோம்' என்றார் முலாயம்.

   

  ஆதரவு: 253

  நாங்கள் அமல்படுத்திய எஃப்டிஐ முடிவுக்கு இப்போது அவையின் (மக்களவை) ஒப்புதல் கிடைத்துள்ளது. -பிரதமர் மன்மோகன் சிங்

   

  எதிர்ப்பு: 218

  அரசு அவையில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தார்மிக அடிப்படையில் தோல்வியடைந்து விட்டது. - எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai