சுடச்சுட

  

  பிரணாபுக்கு எதிரான சங்மா மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

  By dn  |   Published on : 06th December 2012 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sa

  குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மா தாக்கல் செய்த மனுவை பெரும்பான்மை அடிப்படையில் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு சங்மாவின் மனுவை பரிசீலித்தது. இதில் நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகிய 2 பேரும் சங்மாவின் மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என்று கூறினர்.

  ஆனால், நீதிபதிகள் ஜெ.செலமேஸ்வர் மற்றும் ரஞ்சன் கோகோய் ஆகிய 2 பேரும் மாறுபட்ட கருத்து தெரிவித்தனர். முகர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தபோது ஆதாயம் தரும் பதவி வகித்ததால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என இவர்கள் கருத்து தெரிவித்தனர்.

  எனினும், நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த, இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக இந்த அமர்வுக்கு தலைமை தாங்கிய தலைமை நீதிபதி கபீர் தீர்ப்பு வழங்கினார்.

  ""குடியரசுத் தலைவருக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல'' என கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். அதாவது, முகர்ஜிக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என 3 நீதிபதிகளும், ஏற்க வேண்டும் என 2 நீதிபதிகளும் கருதியதால், பெரும்பான்மை அடிப்படையில் சங்மா மனு நிராகரிக்கப்பட்டது.

  குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்தபோது, இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ஐஎஸ்ஐ) தலைவராக இருந்துகொண்டே பிரணாப் முகர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும், அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ.சங்மா தேர்தல் அதிகாரியைக் கேட்டுக் கொண்டார். ஆனால், இவரது கோரிக்கையை நிராகரித்ததையடுத்து, இது தொடர்பாக சங்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

  ஆதாயம் தரும் பதவி என்பது அரசு சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால் ஐஎஸ்ஐ அரசு சார்ந்த அமைப்பு அல்ல என்றும், இதன் மூலம் முகர்ஜி எவ்வித பயனும் அடையவில்லை என்றும் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி கூறியது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai