சுடச்சுட

  

  எஃப்.டி.ஐ.: மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்பு: மாயாவதி முடிவில் திடீர் மாற்றம்

  By dn  |   Published on : 07th December 2012 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mayavathi

  மாநிலங்களவையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ.) தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெறும் வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்போம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

  சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி மக்களவையில் கொண்டு வந்த தீர்மானம் புதன்கிழமை தோற்கடிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வரும் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், எஃப்.டி.ஐ.யை எதிர்ப்பதாகக் கூறி வெளிநடப்புச் செய்தன. இது மறைமுகமாக மத்திய அரசுக்கு ஆதரவான செயலாகவே அமைந்தது.

  இந்நிலையில், மாநிலங்களவையில் எஃப்.டி.ஐ தொடர்பான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  அதிமுக:விவாதத்தை தொடங்கிவைத்து அதிமுக உறுப்பினர் வி.மைத்ரேயன் பேசியதாவது:""சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை அரசு திரும்பப் பெற வேண்டும். முயலுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறிக் கொண்டே, அதை வேட்டையாடும் செயலை திமுக மேற்கொள்கிறது. இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்ற பின்தான், நடவடிக்கை எடுப்போம் என கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மத்திய அரசு இப்போது மீறிவிட்டது. எஃப்.டி.ஐ.யால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது தவறான வாதமாகும்'' என்றார்.

  பாஜக:மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி

  பேசியதாவது:""அரசின் கொள்கை நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்ந்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, அது தொடர்பாக வெளிப்படையாக அறிவித்து அரசுக்கு எதிராகச் செயல்பட வேண்டும். வழக்குகள் தொடர்பாக சிபிஐ தரும் நெருக்கடி காரணமாகவே மத்திய அரசுக்கு மாயாவதி ஆதரவு அளிக்கிறார்.

  சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் எஃப்.டி.ஐ.க்கு எதிராகப் பேசி வந்தன. எதிர்க்கட்சிகள் நடத்திய வேலைநிறுத்தத்துக்கு திமுக ஆதரவளித்தது. ஆனால், இம்மூன்று கட்சிகளும் மத்திய அரசை இப்போது ஆதரித்து வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது, அப்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகன் சிங் எஃப்.டி.ஐ.க்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

  எஃப்.டி.ஐ.க்கு ஆதரவாக முந்தைய பாஜக கூட்டணி அமைச்சரவை முடிவு எடுத்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கூறியது தவறானது. அப்போது நாங்கள் முடிவு எதையும் எடுக்கவில்லை. யோசனை மட்டுமே தெரிவித்தோம்'' என்றார்.

  பகுஜன் சமாஜ்:பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசியது:""வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவளிப்போம். மக்களவையைப் போல, மாநிலங்களவையில் நடைபெறும் வாக்கெடுப்பையும் புறக்கணிக்கத்தான் முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால், அது எஃப்.டி.ஐ.க்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற வழிவகுத்துவிடும். இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவர். நாடாளுமன்றம் செயல்படுவதில் முட்டுக்கட்டை ஏற்படும். பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போய்விடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம்.

  நாங்கள் சிபிஐ-யை கண்டு எப்போதும் பயந்ததில்லை. பாஜக ஆட்சியிலிருந்தபோது, சிபிஐ-யை தவறாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடியது. என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் (தாஜ் வணிக வளாகம், வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக் குவிப்பு) தவறானவை.

  மக்களவையில் தங்களின் தீர்மானம் தோல்வியடைந்ததால், பாஜக ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. தங்களின் திட்டம் நிறைவேறவில்லை; முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை என்பதால், அக்கட்சியின் தலைவர் (மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்) என் மீது வீண் பழி சுமத்துகிறார்'' என்றார் மாயாவதி.

  இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாயாவதி பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், ""மாயாவதி பேசியதில், அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் வகையில் தவறான கருத்து எதுவும் இடம்பெறவில்லை'' என்றார். தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால், அவை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.

   

  மார்க்சிஸ்ட்:மார்க்சிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், ""எஃப்.டி.ஐ. விவசாயிகளின் நலனைப் பாதுகாக்காது; வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தாது. அதை அமல்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், கொள்ளை லாபம் பெறத்தான் இங்கு முதலீடு செய்யத் துடிக்கின்றன'' என்றார்.

   

  திரிணமூல் காங்கிரஸ்:திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தேரெக் ஓ பிரையான் பேசுகையில், ""நாங்கள் சீர்திருத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அதே சமயம், சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு மேற்கொள்ளும் இந்நடவடிக்கையை எதிர்க்கிறோம். இது அன்னிய நேரடி முதலீடாக இருக்கப்போவதில்லை; தலையீடாகத்தான் இருக்கப் போகிறது'' என்றார்.

   

  சமாஜவாதி:சமாஜவாதி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசியது: நாங்கள் ஆட்சியில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் எஃப்.டி.ஐ.யை அனுமதிக்க மாட்டோம். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார்.

   

  திமுக:திமுக உறுப்பினர் டி.சிவா பேசுகையில், ""எஃப்.டி.ஐ.யை நாங்கள் எதிர்க்கிறோம். அதே சமயம், அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். திமுக எப்போதும் நண்பர்களைக் கைவிட்டதில்லை. நாட்டில் அடிக்கடி தேர்தல் நடப்பது நல்லதல்ல'' என்றார்.

  காங்கிரஸ்:மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார்

  பேசுகையில், ""நாட்டின் பொருளாதார நிலை, வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மிகவும் தெளிவான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த முடிவால் குளிர்பதனக் கிடங்கு உள்ளிட்ட கட்டமைப்புத் துறைகளில் அதிக முதலீடு வரும். விவசாயிகளும், நுகர்வோரும் பயன்பெறுவர்'' என்றார்.

  மாநிலங்களவையிலும் வெற்றி பெறுவோம்

  புதுதில்லி,டிச.6: மாநிலங்களவையிலும் எஃப்.டி.ஐ. தீர்மானத்தில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

  நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: மக்களவையைப் போன்று மாநிலங்களவையிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ளது'' என்றார்.

  மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ""விவாதம் நடைபெற்ற பின், அரசுக்கு வெற்றி கிடைப்பது உறுதி'' என்றார்.

   

  மக்களவையில் எஃப்.டி.ஐ.யை எதிர்ப்பதாகக்

  கூறிய பகுஜன் சமாஜ், ஒரே நாளில் தனது நிலையை மாற்றிக் கொண்டது ஏன்? இதுபோன்ற முடிவுக்கு வர வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அக்கட்சி தெரிவிக்க வேண்டும். இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், காங்கிரஸýக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே மறைமுக பேரம் நடந்திருப்பதாகச் சந்தேகப்படுகிறோம்.

  - மாநிலங்களவை
  பாஜக துணைத் தலைவர் ரவி சங்கர் பிரசாத்

   

  பகுஜன் சமாஜ் கட்சிக்கும், காங்கிரஸூக்கும் இடையே எந்தவிதமான மறைமுக பேரமும் நடைபெறவில்லை. எஃப்.டி.ஐ. விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது.

  - நாடாளுமன்ற
  விவகாரங்கள்துறை அமைச்சர் கமல்நாத்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai