சுடச்சுட

  

  கூடங்குளம் திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

  By dn  |   Published on : 07th December 2012 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Kudankulam

  கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.

  ஏற்கெனவே, இந்த வழக்கில் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற முதல் நாள் விசாரணையின்போது இத்திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

  கூடங்குளம் திட்டத்துக்கு எதிரான வழக்கில் மனுதாரர், அரசு தரப்பு வாதங்கள் வியாழக்கிழமை முடிவடைந்ததன. அதையடுத்து, தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் கூறினர். கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று "பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பைச் சேர்ந்த ஜி. சுந்தர்ராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது ஆஜரான, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் குரு கிருஷ்ண குமார், "கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்திலிருந்து மே மாதம் வரை அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 13 கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.

  இதையடுத்து சுந்தர்ராஜன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும், பயன்படுத்தப்பட்ட எரிபொருள் (ஸ்பென்ட் ஃபியூவல்) எங்கு கொண்டு செல்லப்படும் என்பதை மத்திய அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை.

  வழக்கு நிலுவையில் இருக்கும்போது, "இம்மாத இறுதியில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்' என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

  பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

  ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

  அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மத்திய அரசு, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் வாதங்கள் ஏற்கெனவே முடிவடைந்து விட்டதால் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் கூறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai