Enable Javscript for better performance
சோனியா, ராகுல் மீது சுப்ரமணியன் சுவாமி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    சோனியா, ராகுல் மீது சுப்ரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

    By தினமணி  |   Published on : 02nd November 2012 02:08 AM  |   அ+அ அ-   |    |  

    subbb

    காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் நடத்தி வரும் நிறுவனம், "நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிட்ட நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி இருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டி உள்ளார்.

    தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சுவாமி கூறியதாவது:

     காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து "யங் இந்தியன்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி உள்ளனர். இதில் இருவருக்கும் தலா 38 சதவீத பங்குகள் உள்ளன.

     இந்நிறுவனம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்ட "அசோசியேட்டடு ஜர்னல்ஸ்' நிறுவனத்தை வாங்கி உள்ளது. அந்த நிறுவனம் "நேஷனல் ஹெரால்டு' மற்றும் "குவாமி அவாஸ்' ஆகிய பத்திரிகைகளை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், "அசோசியேட்டடு ஜர்னல்ஸ்', அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து ரூ.90 கோடி கடன் வாங்கி உள்ளது. இது சட்டவிரோத செயல் ஆகும். அதாவது, வருமான வரிச் சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் வர்த்தக நோக்கத்துக்காக கடன் வழங்கக் கூடாது.

     மேலும், யங் இந்தியன் நிறுவனம் காங்கிரஸ் கமிட்டிக்கு வெறும் ரூ.50 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்திவிட்டு இந்தக் கடனை முடித்துக் கொண்டது. வாரிய தீர்மானத்தின் அடிப்படையில், அசோசியேட்டடு ஜர்னல் பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தனைக்கும், யங் இந்தியன் பத்திரிகை எதையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     இதன் மூலம் அசோசியேட்டடு ஜர்னலுக்கு சொந்தமாக தில்லியில் உள்ள "ஹெரால்டு ஹவுஸ்' மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லியில் உள்ள மற்ற அனைத்து சொத்துகளும் யங் இந்தியன் நிறுவனத்தின் வசமாகி உள்ளது. இந்த சொத்துகள் பல கோடி மதிப்பு கொண்டதாகும்.

     இந்த விவகாரம் குறித்து கம்பெனி விவகார அமைச்சகமும், சி.பி.ஐ.யும் விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து, அந்த அமைப்புகளுக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார் சுவாமி.

    தம் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ராகுல் காந்தி, சுப்ரமணியன் சுவாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் பல்பீர் புஞ்ச் தெரிவித்துள்ளார்.

    kattana sevai