Enable Javscript for better performance
முதலீட்டுக்கு நிதிப் பற்றாக்குறை தடையாக உள்ளது: பிரதமர் மன்மோகன் சிங்- Dinamani

சுடச்சுட

    

    முதலீட்டுக்கு நிதிப் பற்றாக்குறை தடையாக உள்ளது: பிரதமர் மன்மோகன் சிங்

    By தினமணி  |   Published on : 02nd November 2012 01:57 AM  |   அ+அ அ-   |    |  

    C01DPMRE

    உள்நாட்டு மற்றும் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு கடுமையான நிதிப்பற்றாக்குறை பெரும் தடையாக இருக்கிறது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதிலிருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

     அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பிறகு முதன்முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியது:

     ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 9 ஆண்டுகளில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், ஆதார் அடையாள அட்டை திட்டம் உள்ளிட்ட பல பயனுள்ள திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. எனினும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

     இதன் காரணமாக நமது பொருளாதார வளர்ச்சியும் சரிந்துள்ளது. ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு மற்றும் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு பெரும் தடையாக உள்ளது.

     இந்நிலையில், 12ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் உள்கட்டமைப்புத் துறையில் சுமார் ரூ.50 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை எட்டுவதற்கு பல்வேறு நிலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

     முதலீட்டை ஈர்க்க வேண்டுமானால், இப்போது உள்ள கடுமையான நிதிப் பற்றாக்குறையிலிருந்து விரைவாக விடுபட வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக, உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டை ஈர்ப்பதற்கு, எரிபொருள் சப்ளைக்கான ஏற்பாடு, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவை பெரும் தடைக்கல்லாக உள்ளன.

     மேலும் மின்சார உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதற்கு இவையே முக்கிய காரணங்களாக உள்ளன.

     இத்தகைய பிரச்னைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

     அரசியல் வாழ்வில் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டி இருப்பதை நான் அறிவேன். அதேநேரம், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டிய பொறுப்பு நம் கையில் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

     எனவே, மற்ற எந்தக் காரணத்துக்காகவும் நமது பாதையிலிருந்து விலகிவிடக் கூடாது. நாட்டு மக்களுக்குப் பணியாற்றுவதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களால் முடிந்தவரை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

     அமைச்சரவையில் இளையவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் இளைய அமைச்சர்களுக்கு பணிகளை ஒதுக்கிக் கொடுத்து அவர்களை வழிநடத்த வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.

    kattana sevai