Enable Javscript for better performance
சோனியா, ராகுல் மீதான சுவாமி குற்றச்சாட்டு பற்றி காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்: அருண் ஜேட்லி - Dinamani

சுடச்சுட

    

    சோனியா, ராகுல் மீதான சுவாமி குற்றச்சாட்டு பற்றி காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்: அருண் ஜேட்லி

    By தினமணி  |   Published on : 03rd November 2012 01:40 AM  |   அ+அ அ-   |    |  

    arunjaitely

    காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது சுப்பிரமணியன் சுவாமி சுமத்திய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

    அதேநேரம், சுவாமியின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாமல் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்ட "அசோசியேட்டடு ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்திக்கு சொந்தமான "யங் இந்தியன்' நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்கி உள்ளதாக சுவாமி குற்றம் சாட்டி இருந்தார்.

    மேலும், இவர்களது நிறுவனத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ரூ.90 கோடி கடன் வழங்கியதாகவும் கூறியிருந்தார்.

    இதுகுறித்து சிம்லாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி கூறியது:

    சுவாமியின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சி விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும். அதைவிடுத்து, இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, உண்மைக்குப் புறம்பானது என மேலோட்டமாகக் கூறப்படும் கருத்தை ஏற்க முடியாது.

    அரசியல் கட்சியின் நிதியை அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வர்த்தக நோக்கத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது. அசோசியேட்டடு நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்ததாக சுவாமி கூறியிருப்பது உண்மையானால், அது தேர்தல் விதிமுறை மற்றும் வருமான வரித் துறையின் விதிமுறைகளை மீறிய செயல் ஆகும்.

    அரசியல் கட்சி வர்த்தக நோக்கத்தில் ஒரு நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருப்பது இதுவே முதன்முறை. இது உண்மையாக இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கான வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார் ஜேட்லி.

    ஆதாரம் இல்லாமல் கருத்து கூற முடியாது: ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறியது: சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாத நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவிக்க இயலாது.

     அதேநேரம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது. மத்திய கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையின்படி, இந்த அரசின் ஊழல் ரூ.5.51 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது என்றார்.

    குற்றச்சாட்டை சுவாமி நிரூபிக்க வேண்டும்: காங்கிரஸ் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது சுவாமியின் வேலை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறியுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    காங்கிரஸ் கட்சி எத்தகைய வர்த்தக பரிவர்த்தனையையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு வருமான வரிச் சட்டத்தையோ, கம்பெனி சட்டத்தையோ மீறி இருந்தால் அதை நிரூபிக்க முடியுமா? இதுவிஷயத்தில் எவ்விதத் தவறும் நடைபெறவில்லை என்பதை நாங்கள் ஏற்கேனவே தெரிவித்து விட்டோம்.

     ஒருவர் மீது குற்றச்சாட்டை சுமத்தும்போது, அதை நிரூபிக்கவேண்டியது குற்றம்சாட்டுபவரின் கடமை. சுப்ரமணியன் சுவாமிக்கு துணிவிருந்தால் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கட்டும்.

     மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவதை சுவாமி வழக்கமாகக் கொண்டுள்ளார். இன்று ஒருவர் மீது குற்றம்சாட்டும் அவர், நாளை மற்றொருவர் மீது குற்றம்சாட்டுவார். இதற்கு போதிய ஆதாரம் இருக்காது. கண்மூடித்தனமாகக் கூறும் குற்றச்சாட்டை அவரால் நிரூபிக்க முடியாது என்றார் சாக்கோ.

    இதுகுறித்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ""இந்த விவகாரத்தில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஏனென்றால், அது ஒரு லாப நோக்கமற்ற நிறுவனம் (பிரிவு 25)'' என்றார்.

    kattana sevai