Enable Javscript for better performance
தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் எர்ரான் நாயுடு சாலை விபத்தில் மரணம்- Dinamani

சுடச்சுட

    

    தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் எர்ரான் நாயுடு சாலை விபத்தில் மரணம்

    By தினமணி  |   Published on : 03rd November 2012 01:28 AM  |   அ+அ அ-   |    |  

    YeranNai

    தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எர்ரான் நாயுடு (55) சாலை விபத்தில் இறந்தார்.

    ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் எர்ரான் நாயுடு வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார். ரணஸ்தலம் என்ற இடத்தில் சென்றபோது, அவரது கார் மீது ஒரு லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த எர்ரான் நாயுடுவை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    எனினும் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

    அவரது மறைவுச் செய்தியை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் ஹைதராபாதில் உள்ள கட்சித் தலைமையகமான என்.டி.ஆர். பவனுக்கு விரைந்தனர். அங்கு எர்ரான் நாயுடுவின் படத்துக்கு அவர்களும், ஏராளமான தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

    மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ""எர்ரான் நாயுடுவின் மறைவின் மூலம் நான் எனது வலது கரத்தை இழந்து விட்டேன்'' என்று தெரிவித்தார்.

    தனது பாதயாத்திரையின் ஒரு பகுதியாக மகபூப்நகர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த அவர், ""இது கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு'' என்று தெரிவித்தார்.  சந்திரபாபு நாயுடு தனது பாத யாத்திரையை ஒரு நாள் ரத்து செய்து விட்டு, விமானம் மூலம்

    ஸ்ரீகாகுளம் சென்று மறைந்த எர்ரான் நாயுடுவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    ஆளுநர், முதல்வர் இரங்கல்: எர்ரான் நாயுடுவின் மறைவுக்கு ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தமிழக ஆளுநர் கே.ரோசையா, மத்திய அமைச்சர்கள் ஜெய்பால் ரெட்டி, புரந்தேஸ்வரி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தலைவர்களும் எர்ரான் நாயுடுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    வாழ்க்கைக் குறிப்பு: ஸ்ரீகாகுளம் மாவட்டம் நிம்மடா கிராமத்தைச் சேர்ந்த எர்ரான் நாயுடு மிக இளம் வயதிலேயே அரசியலில் குதித்தார். தெலுங்கு தேசம் கட்சி கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்டவுடன் அதில் இணைந்தார்.

    ஆந்திர சட்டப்பேரவைக்கு 1983 முதல் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், 1996 முதல் நாடாளுமன்றத்துக்கும் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 மற்றும் 2009 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் மட்டும் அவர் வெற்றி பெறவில்லை. வழக்குரைஞராகச் சிறப்பாகப் பணியாற்றிய அவர், தலைநகர் தில்லியில் தெலுங்கு தேசம் கட்சியின் பிரதிநிதியாகச் செயல்பட்டார். 1996ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் அவர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

    kattana sevai