Enable Javscript for better performance
நாடாளுமன்றத்தில் அமளி, ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாடாளுமன்றத்தில் அமளி, ஒத்திவைப்பு

    By dn  |   Published on : 23rd November 2012 06:14 AM  |   அ+அ அ-   |    |  

    நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான வியாழக்கிழமை அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    மக்களவை வியாழக்கிழமை காலை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் கூடியது. அப்போது "கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் ஆச்சார்யா குரல் எழுப்பினார்.

    அவரைத் தொடர்ந்து பாஜக, இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் ""சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்த மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தினர்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில் ""மத்திய நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது இதே நாடாளுமன்றத்தில் "அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முன்பு அனைத்துக் கட்சிகளுடனும், மாநில முதல்வர்களுடனும் கலந்து பேசிய பிறகுதான் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்' என உறுதியளித்திருந்தார்.

    ஆனால், தற்போது தன்னிச்சையாக அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்து, நாடாளுமன்றத்தை மத்திய அரசு அவமதித்து விட்டது.

    இது தொடர்பாக விவாதிக்க, அவை விதி 184-ன் கீழ் அனுமதிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து பாஜக, இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.  இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து காலை 11.25 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அவையை மீரா குமார் ஒத்திவைத்தார்.

    எனினும், மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.  

     அப்போது பேசிய மீரா குமார் ""மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திரிணமூல் காங்கிரஸ் அளித்துள்ள நோட்டீûஸ பரிசீலிக்க வசதியாக உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

    அதை பொருட்படுத்தாமல் உறுப்பினர்கள் கூச்சலிட்டபடி இருந்ததால் அவை நடவடிக்கையை நண்பகல் 12.30 மணி வரை அவர் ஒத்திவைத்தார்.

     பின்னர் அவை கூடியதும் ""திரிணமூல் காங்கிரஸ் அளித்த, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸýக்கு போதிய உறுப்பினர் பலம் இல்லாததால் அதை நிராகரிக்கிறேன்'' என்று மீரா குமார் கூறினார்.

    இதைத் தொடர்ந்து, அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து இடதுசாரி கட்சிகள், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    வாக்கெடுப்புடன் கூடிய விவாதம்: இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ""சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக, விவாதத்துடன் கூடிய வாக்கொடுப்பை நடத்த மக்களவை தலைவர் அனுமதிக்க வேண்டும்'' என்று கோரினார். அதைப் பரிசீலிப்பதாக மீரா குமார் குறிப்பிட்டார்.

     எனினும், தொடர் அமளியை அடுத்து, பிற்பகல் 2 மணி வரையும், பின்னரும் அதே நிலை நீடித்ததால் வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரையும் மக்களவையை மீரா குமார் ஒத்திவைத்தார். 

    மாநிலங்களவை ஒத்திவைப்பு: மாநிலங்களவை அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் கூடியதும் பாஜக உறுப்பினர் வெங்கய்ய நாயுடு, ""சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்த விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளேன்'' என்றார்.

    அதிமுக அவைத் தலைவர் மைத்ரேயன் பேசுகையில் ""நாட்டு நலனுக்கு எதிராக இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது'' என்று கண்டனம் தெரிவித்தார்.  மத்திய அரசை விமர்சிக்கும் கார்ட்டூன் படத்தை ஏந்தியவாறு அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

    இதனிடையே, "உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் அந்த மாநில அரசு பதவி விலக வேண்டும்' என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கோஷமிட்டார். அவருக்கு ஆதரவாக, அவரது கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

    இதையடுத்து நண்பகல் 12 மணி வரையும், பின்னரும் தொடர்ந்த அமளியால் நாள் முழுவதுமாக அவையை ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.

    நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக முன்னதாக, அவையில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் பல இருப்பதால் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் பிரதமர் என்று கேட்டுக்கொண்டார்.

    kattana sevai