Enable Javscript for better performance
யூரியா உற்பத்திச் செலவைக் குறைக்க புதிய கொள்கை:மத்திய அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    யூரியா உற்பத்திச் செலவைக் குறைக்க புதிய கொள்கை:மத்திய அரசு தகவல்

    By dn  |   Published on : 23rd November 2012 05:44 AM  |   அ+அ அ-   |    |  

    உர மானியத்தைக் குறைப்பதற்காக, யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளில், நாப்தா எரிபொருளுக்குப் பதில் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது என்று நாடாளு மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், கேள்வி நேரத்தின் போது பல்வேறு கேள்விகளுக்கு அந்தத்துறை அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் பதிலளித்தனர். அவற்றின் விவரம் வருமாறு:

    உரத் துறை: உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாப்தா (பெட்ரோலியம் சார்ந்த நீர்ம எரிபொருள்)வில் இயங்கும் யூரியா உரத் தொழிற்சாலைகள், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதன் மூலம் யூரியாவின் உற்பத்திச் செலவு பல மடங்கு குறையும். இதற்கான கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செலவு குறைந்தால், மானியத்தின் அளவும் குறையும். இயற்கை எரிவாயுவில் இயங்கும் யூரியா உற்பத்தி தொழிற்சாலைகளாக மாற்ற, துரித நடவடிக்கை எடுக்கும்படி நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது இயங்கி வரும் யூரியா உற்பத்தி அலகுகளில், புதிய விலைத் திட்டத்தை அமல்படுத்தவும், பரிசீலித்து வருகிறோம் என்று பதிலளித்துள்ளார் உரத்துறை மத்திய இணையமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜேனா.

    யூரியாவின் உற்பத்திச் செலவில் 80 சதவீதம் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது. நாப்தா மூலம் இயங்கும் தொழிற்சாலைகளில் ஒரு டன் யூரியா உற்பத்தி செய்ய, ரூ.28 ஆயிரம் செலவாகிறது. இயற்கை எரிவாயுவில் இயங்கும் தொழிற்சாலையில் டன்னுக்கு ரூ.8,500 மட்டுமே செலவாகும். கடந்த நிதியாண்டில் யூரியா மானியமாக ரூ. 25,000 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிறுவனங்கள் விவகாரத் துறை:நிறுவனங்களிடையே போட்டித்தன்மையை உறுதி செய்யும் சட்டங்களை விரிவு செய்வதற்காக, "அறிவுசார் கூட்டாண்மை', ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, தில்லி, ஜோத்பூர், பாட்டியாலா, குவாஹாட்டி, ராஞ்சி, புணே, சோன்பட் பகுதிகளில் உள்ள சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்த அமைப்பை, நிறுவனங்களுக்கிடையே போட்டியை உறுதி செய்யும் ஆணையம் (சிசிஐ)  ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிசிஐயின் தலைவருக்கு, சோதனைகள் நடத்துததல் மற்றும் கைப்பற்றுதல் அதிகாரம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் நிறுவனங்கள் விவகாரத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) சச்சின் பைலட்.

    புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை: உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது, சுற்றுச்சூழல் துறை ஒப்புதல், சட்ட ஒப்புதல், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற தருணங்களில் குறிப்பிட்ட ஒரு அலுவலரை பொறுப்பாளியாக்குவது சிக்கலான விஷயம். கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வரை, 560 திட்டங்களில், 272 திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவையனைத்தும் ரூ.150 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய திட்டங்கள்.

    ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்த தனி நிதியமைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது துரிதப்படுத்தப்படும்.

    தனியார் துறையில் ரூ,1,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது, அதனை நிதிச் சேவைகள் துறை கண்காணிக்கும் என்றார் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜேனா.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp