Enable Javscript for better performance
பிரதமரின் வீடு முற்றுகை: ஆதரவாளர்களுடன் கேஜரிவால் கைது- Dinamani

சுடச்சுட

  

  பிரதமரின் வீடு முற்றுகை: ஆதரவாளர்களுடன் கேஜரிவால் கைது

  By தினமணி  |   Published on : 13th October 2012 12:37 AM  |   அ+அ அ-   |    |  

  12dkeji

  மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தைப் பதவி நீக்கம் செய்யக் கோரி தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டை வெள்ளிக்கிழமை நண்பகலில் முற்றுகையிட முயன்ற அரவிந்த் கேஜரிவாலையும் அவரது ஆதரவாளர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவி லூயிஸ் குர்ஷித்தும் ஜாகிர் ஹுசைன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர்.

  இந்த அறக்கட்டளைக்கு மாற்றுத் திறனாளிகள் நலப் பணிகளுக்காக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை ஒதுக்கிய நிதியை சல்மான் குர்ஷித்தின் மனைவியும் அறக்கட்டளை நிர்வாகத்தினரும் சேர்ந்து பயனாளிகளின் பெயரில் போலியாகக் கையெழுத்திட்டு மோசடி செய்ததாக அரவிந்த் கேஜரிவால் கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.

  இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய விக்லாங் கட்சியினரும் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான "ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தினரும் பிரதமரின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை திடீரென்று வியாழக்கிழமை மாலையில் அறிவித்தனர்.

  அதன்படி, வெள்ளிக்கிழமை நண்பகலில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை அருகில் உள்ள ஜன்பத் சாலையில் ராஷ்ட்ரீய விக்லாங் கட்சியினரும் கேஜரிவால் ஆதரவாளர்களும் திரண்டனர். இதையடுத்து தில்லி போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக போலீஸ் வேன், பேருந்துகளில் ஏற்றினர். 

   அப்போது அங்கு வந்த கேஜரிவாலிடம் இங்கு குழுவாக நிற்கவோ,போராட்டம் நடத்தவோ அனுமதி இல்லை. அதையும் மீறி கூட்டம் கூடினால் கைது செய்ய நேரிடும். பிரதமரின் முக்கிய அலுவல்கள் முன்கூட்டியே இறுதி செய்யப்பட்டு விட்டதால் உங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை எனத் தகவல் வந்துள்ளது. அதனால், ஜன்பத் சாலையில் இருந்து கலைந்து செல்லுங்கள்'' என்று போலீஸார் கூறினர்.

   அதைப் பொருட்படுத்தாமல் அரவிந்த் கேஜரிவால் சுமார் 200 ஆதரவாளர்களுடன் பிரதமரின் வீட்டை முற்றுகையிட முயன்றபோது போலீஸார் அனைவரையும் பலவந்தமாக போலீஸ் பேருந்தில் ஏற்றினர்.

   பின்னர் செய்தியாளர்களிடம் கேஜரிவால் பேசுகையில், முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம். மாற்றுத்திறனாளிகள் பலரும் இதில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட பிரதமர் மறுக்கிறார்.

   ஊழல் செய்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் வலம் வருகிறார்கள். அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் சிறை வைக்கப்படுகிறார்கள். எங்களது ஆதரவாளர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே சிறையில் அடைத்தால் வெளியே வரமாட்டார்கள். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

   மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அவரது மனைவி மீதும் போலீஸôர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதுவரை மத்திய சட்ட அமைச்சர் பதவியில் இருந்து சல்மான் குர்ஷீத்தை நீக்க வேண்டும்.  குர்ஷித் தம்பதிக்கு சமுதாயத்தில் மிகப் பெரிய செல்வாக்கு உள்ளது. அதனால் அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைத்து விடுவர்'' என்று கேஜரிவால் கூறினார்.

   இதைத் தொடர்ந்து கேஜரிவால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் ராஷ்டிரீய விக்லாங் கட்சியினர் இருந்த பேருந்துகளை தில்லி எல்லையில் உள்ள பவானாவுக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
   

  சல்மான் குர்ஷித் மனைவி மறுப்பு
  அரவிந்த் கேஜரிவால் சுமத்தும் குற்றச்சாட்டுகளை சல்மான் குர்ஷித் மனைவி லூயிஸ் மறுத்துள்ளார்.

   அவர் வெளியிட்டுள்ள இரண்டு பக்க அறிக்கையில், ""கேஜரிவால் சுமத்தும் புகாரில் எந்த உண்மையும் இல்லை. எங்களது அறக்கட்டளைக்கு மத்திய அரசு வழங்கிய நிதி பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தும்படி நாங்களே உத்தரப் பிரதேச அரசுக்கு  கடிதம் எழுதியுள்ளோம். விசாரணை முடிவில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

  இதற்கிடையே, தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக அரவிந்த் கேஜரிவால் மீது அவதூறு வழக்கு தொடருவது குறித்து வழக்குரைஞர்களுடன் சல்மான் குர்ஷித் ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தில்லியில் பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து தூக்கிச் செல்லும் போலீஸார்.

  kattana sevai