Enable Javscript for better performance
ஜீ செய்தித் தொலைக்காட்சிக்கு எதிரான ஆதாரம்: ஜிண்டால் நிறுவனம் வெளியிட்டது- Dinamani

சுடச்சுட

    

    ஜீ செய்தித் தொலைக்காட்சிக்கு எதிரான ஆதாரம்: ஜிண்டால் நிறுவனம் வெளியிட்டது

    By dn  |   Published on : 26th October 2012 05:00 AM  |   அ+அ அ-   |    |  

    naveenjindal

    தனக்கு எதிராக செய்தி ஒளிபரப்பாமல் இருக்க ரூ. 100 கோடி கேட்டு ஜீ செய்தித் தொலைக்காட்சி பிரதிநிதிகள் பேரம் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை ஜிண்டால் உருக்கு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் (ஜே.எஸ்.பி.எல்.) வியாழக்கிழமை வெளியிட்டது.

    இது தொடர்பாக ஜிண்டால் நிறுவனத்தின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான நவீன் ஜிண்டால் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:÷""நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஜிண்டால் நிறுவனம் தொடர்பான செய்தியை வெளியிடாமல் இருக்க ஆண்டுக்கு ரூ. 20 கோடி வீதம் நான்கு ஆண்டுகள் தர வேண்டும் என்று ஜீ செய்தித் தொலைக்காட்சி நிறுவன உயர் அதிகாரிகள் எங்களிடம் பேரம் பேசினர். பின்னர், ரூ. 100 கோடி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பாக ஜீ செய்தித் தொலைக்காட்சியின் தலைவர் சுதீர் செளத்ரி, வர்த்தகப் பிரிவு தலைவர் சமீர் அலுவாலியா ஆகியோர் எங்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தில்லியில் வெவ்வேறு பகுதிகளில் எங்கள் பிரதிநிதிகளுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்துள்ளோம்.

    அந்தத் தொலைக்காட்சி நிறுவனப் பிரதிநிதிகளின் செயல்பாடு வெட்கக்கேடாகவும், மிரட்டிப் பணம் பறிக்கும் வகையிலும் இருக்கிறது. இது செய்தி ஒளிபரப்பு சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராகவும், பத்திரிகை தர்மத்துக்கு எதிராகவும் உள்ளது'' என்றார்.

    பின்னர், ஜீ செய்தித் தொலைக்காட்சி மற்றும் ஜிண்டால் நிறுவனப் பிரதிநிதிகளுக்கு இடையே நிகழ்ந்த உரையாடலின் வரிவடிவத்தையும், சி.டி. ஆதாரங்களையும் செய்தியாளர்களிடம் நவீன் ஜிண்டால் அளித்தார். தங்களிடம் மேலும் வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஜீ செய்தித் தொலைகாட்சி மீது ஜிண்டால் நிறுவனம் ஏற்கெனவே வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் பேட்டியின்போது சத்தீஸ்கர் மாநிலம் ராய்காரை சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நவீன் ஜிண்டாலுக்கு எதிராக கோஷமிட்டார்.

    முன்னதாக ஏல முறையின்றி நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்றதன் மூலம் பயனடைந்த நிறுவனங்களில், ஜிண்டால் நிறுவனமும் ஒன்று என தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜீ செய்தித் தொலைக்காட்சி மறுப்பு:÷இந்நிலையில், ஜீ செய்தித் தொலைக்காட்சி அளித்த விளக்கத்தில், "நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஜிண்டால் நிறுவனத்துக்கு உள்ள தொடர்பு குறித்து நாங்கள் வெளியிட்ட செய்தியால் அச்சமடைந்து, எங்களை விலைக்கு வாங்க அந்நிறுவனம் முயற்சித்தது.

    முதலில் சமீர் அலுவாலியாவை தொடர்பு கொண்ட அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள், செய்தியை ஒளிபரப்பாமல் இருக்குமாறும், அதற்கு ரூ. 25 கோடி தருவதாகவும் தெரிவித்தனர். இதை சமீர் அலுவாலியா மறுத்துவிட்டார்.

    பின்னர் ரூ. 100 கோடிக்கு விளம்பரம் அளிப்பதாகக் கூறினர். அவர்களை சிக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே பேரம் பேசுவது போல போலியாக நடித்தோம்.

    இந்நிலையில், அந்நிறுவனத்தின் இப்போதைய செயல், எங்களின் புகழைக் சீர்குலைக்கவும், வீண் பழி சுமத்தி விசாரணையை திசை திருப்பும் முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    kattana sevai