Enable Javscript for better performance
நிதின் கட்கரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    நிதின் கட்கரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

    By dn  |   Published on : 26th October 2012 12:57 AM  |   அ+அ அ-   |    |  

    nitin

    பாஜக தலைவர் நிதின் கட்கரிக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

    ஏற்கெனவே நிறுவன விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில் இப்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிதின் கட்கரிக்குச் சொந்தமான பூர்தி பவர் மற்றும் சுகர்ஸ் லிமிடெட் (பிபிஎஸ்எல்) நிறுவன த்துக்கு எந்தெந்த நிறுவனங்களிலிருந்து நிதி வந்துள்ளது என்ற விவரத்தை வருமான வரித்துறையினர் திரட்டி வருகின்றனர்.

    தாங்கள் திரட்டிய ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 18 நிறுவனங்கள் பிபிஎஸ்எல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    செயல்படாத நிறுவனங்கள் பல பிபிஎஸ்எல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இது குறித்த விரிவான அறிக்கை மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்திடம் (சிபிடிடி) விரைவில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    நிதின் கட்கரிக்குச் சொந்தமான நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் குறித்த விவரத்தை சேகரிக்கத் தொடங்கியுள்ளோம். இது தொடர்பான விசாரணையில் மும்பை மற்றும் புணேயைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் முழுமையாக ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    தேவையான ஆவணங்கள் கிடைத்தபிறகு, தேவைப்பட்டால் பாஜக தலைவர் நிதின் கட்கரியை நேரில் ஆஜராகுமாறு அழைத்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    நிதின் கட்கரிக்குச் சொந்தமான நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளன. 1995ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நிதின் கட்கரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது ஐடியல் ரோட் பில்டர்ஸ் (ஐஆர்பி) எனும் நிறுவனத்துக்கு விதிகளை மீறி சலுகை காட்டியதாக புகார் எழுந்துள்ளது.

    அதற்கு பிரதி உபகாரமாக இந்நிறுவனம் நிதின் கட்கரி நிறுவனத்தில் பல்வேறு முதலீடுகளைச் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    முதலீடுகள் செய்வதற்காகவே பல நிறுவனங்கள் போலியாக தொடங்கப்பட்டு அவை செயல்படுத்தப்படவேயில்லை. இந்நிறுவனங்கள் பெயரளவில் மட்டும் நிறுவன பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    ஏற்கெனவே இது தொடர்பாக தனது அமைச்சகம் விரிவான விசாரணை மேற்கொள்ளும் என மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி குறிப்பிட்டுள்ளார். ஆனால் எத்தகைய விசாரணையையும் சந்திக்க தான் தயாராக இருப்பதாக கட்கரி கூறியுள்ளார்.

    தில்லி பயணம் ரத்து: இதனிடையே நாகபுரியிலிருந்து வியாழக்கிழமை தில்லி திரும்புவதாக கட்கரி முன்னர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த பயண திட்டத்தை அவர் ரத்து செய்துள்ளார். வயிற்றுப் போக்கு மற்றும் தசரா விழாக்களில் பங்கேற்றதால் ஏற்பட்ட சோர்வு காரணமாக தனது பயணத்திட்டத்தை கட்கரி ரத்து செய்ததாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.

    தில்லிக்குச் சென்று பாஜகவின் முன்னணி தலைவர்களை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.

    kattana sevai