சுடச்சுட

  

  பெங்களூரில் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 11 போலீஸார் உள்பட 16 பேர் காயம்

  By dn  |   Published on : 18th April 2013 02:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  blast

  பெங்களூர் மல்லேஸ்வரத்தில் பாஜக தலைமை அலுவலகத்தின் அருகே புதன்கிழமை குண்டு வெடித்ததில் 11 போலீஸார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். இந்த வெடிகுண்டுத் தாக்குதல் பயங்கரவாதிகளின் சதிச் செயலாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

  பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் கர்நாடக மாநில பாஜக தலைமை அலுவலகமான "ஜெகநாத்பவன்' உள்ளது. மே 5ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தலைமை அலுவலகத்தின் அருகே கோரமங்களா 4ஆவது அணி, கர்நாடக அதிரடிப் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  இந்த நிலையில், புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த 500 கிராம் எடை கொண்ட குண்டு வெடித்தது.

  இதில், அந்த மோட்டார் சைக்கிளின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், போலீஸ் வேன் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன.

  தீப்பற்றி எரிந்தன: கார்கள், பைக்குகளில் மளமளவென தீப்பற்றியது. இதில், கர்நாடக அதிரடிப் படையைச் சேர்ந்த வெங்கடேஷ், ஜெயண்ணா, ராமேகெüடா, சந்திரப்பா, கணேஷ்ராவ், குஞ்சப்பா, எஸ்.பி.கோணி, சபீஷ், விஸ்வேஸ்வரய்யா, பாலகிருஷ்ணா, மற்றொரு வெங்கடேஷ், பொதுமக்களில் நிஷா, ரக்ஷிதா உள்ளிட்ட பெண்களும், ரஞ்சித், பால்ராஜ், சதீன்ஷா ஆகியோரும் காயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

  இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர்களிடம் கூறியது:

  பெங்களூர் மல்லேஸ்வரம் 11ஆவது குறுக்குத் தெருவில் பாஜக அலுவலகப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  கர்நாடகத்தில் தேர்தல் பணிகளைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கிறோம்.

  கடந்த 4 நாள்களுக்கு முன்பே மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததால், மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இருப்பினும், குண்டு வெடிப்பு நடந்துள்ளதால், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதலாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம் என்றார் அவர்.

  பெங்களூரில் தாக்குதல்கள்: ஏற்கெனவே கடந்த 2005ஆம் ஆண்டு பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விஞ்ஞானிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், விஞ்ஞானி முனித்சந்திரா கொல்லப்பட்டார்.

  இதையடுத்து, 2008 ஜூலை 25ஆம் தேதி மடிவாளா, மைசூர் சாலை, ஆடுகோடி, கோரமங்களா, விட்டல்மல்லையா சாலை, லாங்க்போர்டு சாலை, ரிச்சர்ட் டவுன் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

  2010-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் திடலில் ஏப்ரல் 17ஆம் தேதி 2 குண்டுகள் வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். தற்போது மீண்டும் அதே ஏப்ரல் 17ஆம் தேதியன்று பாஜக அலுவலகத்தின் அருகே குண்டு வெடித்தது.

  பெங்களூரில் பதற்றம்: இந்தச் சம்பவத்தை அடுத்து, பெங்களூர் வந்துள்ள தேசிய புலனாய்வுப் படை, தேசிய பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவத்தால், பெங்களூரில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai