புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டம்: பிரதமர் மன்மோகன் சிங் தகவல்

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங்
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டம்: பிரதமர் மன்மோகன் சிங் தகவல்

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

மேலும், மாசற்ற மின் உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 4ஆவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்த அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

2012ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறன் 25,000 மெகாவாட்டாக இருந்தது. இதை 2017ஆம் ஆண்டுக்குள் 55,000 மெகாவாட்டாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக கரியமில வாயுவின் அளவைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என 12ஆவது ஐந்தாண்டு திட்டம் வலியுறுத்துகிறது.

அந்த வகையில், 2020ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி.) ஆற்றல் செறிவை 20 முதல் 25 சதவீதம் குறைப்பதற்காக, மின்சக்தி பயன்பாட்டை திறமையாக நிர்வகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீர், சூரிய ஒளி மற்றும் காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலமான மின் சக்தி (மாசற்ற) உற்பத்தியை அதிகரிக்க ஐந்தாண்டு திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், வழக்கமான மின் உற்பத்திக்கான செலவைவிட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கான செலவு அதிகமாக உள்ளது.

உயிரிக் கழிவை அடிப்படையாகக் கொண்ட மின்சார உற்பத்திக்கான செலவைவிட, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கான செலவு அதிகமாக உள்ளது. எனினும், கடந்த 2 ஆண்டுகளில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான செலவு பாதியாகக் குறைந்துள்ளது.

கரியமில வாயு வெளிப்படுவதால் ஏற்படும் விளைவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், சூரிய மின் உற்பத்தி என்பது மிகவும் சிக்கனமானது ஆகும்.

சூரிய மின் உற்பத்திக்கான செலவைக் குறைப்பதற்காக ஜவாஹர்லால் நேரு தேசிய சூரிய திட்டத்தின் மூலம் 2022க்குள் 22,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, இத்துறையில் இந்தியாவில் முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

மானியம் வழங்க வேண்டும்: இப்போது உள்ள சூழ்நிலையில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு அதிக செலவாகிறது. தனியார் நிறுவனங்கள் மானியம் இல்லாமல் இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வது சாத்தியமாகாது. இத்துறையில் மூதலீடு செய்பவர்கள் இப்போது வழங்கப்படும் மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும்: பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தை மந்த நிலையில் உள்ளது கவலை அளிக்கிறது.

தொழில்நுடபத்தில் சிறந்த விளங்கும் வளர்ந்த நாடுகள், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளைக் கண்டறிய முன்னுரிமை அளிக்க வேண்டும். அது அவர்களுடைய நாட்டுக்கு மட்டுமல்லாது உலக நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் மன்மோகன் சிங்.

புதுப்பிக்கத்தக்க மின்சார பயன்பாடு ஊக்குவிக்கப்படும்: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், ""புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு நம் நாட்டைவிட சீனா 10 மடங்கு கூடுதல் முதலீடு செய்துள்ளது. எனவே, இத்துறையில் நமது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும். உள்நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் தேவையான உதவியைச் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது'' என்றார்.

எரிபொருள் மானியத்தை ரத்து செய்ய வேண்டும்: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்வதேச ஆற்றல் அமைப்பின் (ஐ.இ.ஏ.) செயல் தலைவர் மரியா வன் டெர் ஹோவன் கூறுகையில், ""ஆற்றல் வீணாவதற்கு நாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீண்ட காலமாகவே நாம் உறுதுணையாக இருந்து வருகிறோம். சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்து சர்வதேச சமுதாயம் தப்பிக்க வேண்டுமானால் ஆற்றல் வீணாவதைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, எரிபொருளுக்கு மானியம் வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com